மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பெருமளவில் கொந்தளிப்பும், போராட்டங்களும் வெடித்துள்ளன. இத்தகையப் போராட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நீட் எனப்படும் மிகப்பெரிய சமூக அநீதியை விரட்ட சட்டப் போராட்டம் என்ற வலிமையான ஆயுதம் கைகளில் இருந்தும் அதை அரசு பயன்படுத்தாதது கண்டிக்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உச்சநீதிமன்ற ஆணைப்படி தான் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் கூட, ஒரு வகையில் இப்போது நடத்தப்படும் நீட் தேர்வு சட்ட விரோதமானது என்பது தான் உண்மையாகும். நீட் தேர்வு சட்டப்படி செல்லும் என்று உச்சநீதிமன்றம் இப்போது வரை எந்தத் தீர்ப்பும் வழங்கவில்லை. மாறாக நீட் தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை கட்டாயமாக்கி 2012-ஆம் ஆண்டு மத்திய அரசு ஆணையிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், அனில்தவே ஆகியோர் அடங்கிய அமர்வு 18.07.2013 அன்று அளித்தத் தீர்ப்பில் நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள பல்வேறு உரிமைகளை பறிப்பதால் அது செல்லாது என்று தீர்ப்பளித்தது. நீதிபதி அனில் தவே மட்டும் இதற்கு எதிராக தீர்ப்பளித்திருந்தார். இதனால் 2013 முதல் 2015 வரை இந்தியாவில் எங்கும் நீட் தேர்வு நடத்தப்படவில்லை என்பதே உண்மை.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்த அனில்தவே தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு, நீட் தேர்வு செல்லாது என 2013-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டத் தீர்ப்பை திரும்பப்பெறுவதாக 11.04.2016 அன்று ஆணையிட்டது. 2013-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு முன்பாக நீதிபதிகள் கலந்து பேசவில்லை என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே அத்தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டது. மற்றபடி நீட் தேர்வு ஏன் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான எந்த நியாயத்தையும் நீதிபதிகள் கூறவில்லை. அதுமட்டுமின்றி நீட் தேர்வு தேவையில்லை என்று 2013-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்று கூட உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக இவ்வழக்கை மீண்டும் தொடக்கத்திலிருந்து விசாரிக்கப்போவதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
ஆனால், அதன்பின்னர் 25 மாதங்களாகியும் அந்த வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கவில்லை. அத்தகைய சூழலில், எந்தக் காரணமும் கூறாமல், நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை திரும்பப்பெறும் ஆணையை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நீட் தேர்வை நடத்துவது நியாயமில்லை.. 11.04.2016 அன்று அனில்தவே தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு அளித்த தீர்ப்பு இடைக்கால ஏற்பாடாகத் தான் பார்க்கப்பட வேண்டும். அந்த வழக்கின் விசாரணையை முடித்து இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகு தான் 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வே நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
சீராய்வு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 08.03.2016 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட சுகாதாரத்துறைக்கான நிலைக்குழுவின் அறிக்கையின் 5.26-ஆவது பத்தியில் இத்தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விளக்களித்திடவும் அவ்வாறு விலக்களிக்கப்பட்ட மாநிலங்கள் பிறகு இத்தேர்வை ஏற்க முன்வந்தால் அதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. நீட் தேர்வு தொடர்பான முதன்மை வழக்கு விசாரிக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையைக் காரணம் காட்டியும், தமிழகத்தில் 2007-ஆம் ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதைக் காரணம் காட்டியும் விலக்களிக்கப் பட்டிருக்கலாம். அந்த வாய்ப்புகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல், முதன்மை வழக்கின் விசாரணையை முடக்கி வைத்திருப்பதன் மூலம் நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நீட் தேர்வின் செல்லும் தன்மை குறித்த வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வால் தான் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், நீட் தேர்வு தொடர்பான வேறு பல வழக்குகளை அனில்தவே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறது. இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். நீட் தேர்வு குறித்த சீராய்வு மனுவை விசாரித்த 5 நீதிபதிகளில் அனில் தவே, ஆர்.கே.அகர்வால் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர். நான்காவது நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் உச்சநீதிமன்ற விடுமுறைக்கு பிறகு 06.07.2018 அன்று ஓய்வுபெறவிருக்கிறார். இவர்கள் தவிர நீதிபதிகள் அர்ஜன்குமார் சிக்ரி, பானுமதி ஆகியோர் மட்டுமே பணியில் நீடிக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் அரசியல் சட்ட அமர்வுக்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து முதன்மை வழக்கை விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும்; அவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் வரை நீட் தேர்வு நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்பதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி 15 மாதங்களாகியும் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இத்தகைய சூழலில் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் தீர்வுக்கு வழிவகுக்கும். அதைவிடுத்து வெற்று முழக்கங்களை எழுப்புவதால் எந்த பயனும் இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
எனவே, நீட் தேர்வு தொடர்பான முதன்மை வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கோடை விடுமுறைக்காக மூடப்படுவதற்கு முன்பாக தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அது தான் நீட் கொடுமையிலிருந்து விடுதலை பெற்றுத் தரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.