Skip to main content

நீட் விலக்கு மசோதா; குடியரசுத் தலைவரிடம் முதல்வர் நேரில் வலியுறுத்தல்

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

NEET Exemption Bill; The Chief Minister's personal appeal to the President

 

சென்னையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டார். இதையடுத்து டெல்லி புறப்பட்டுச் செல்லும் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இன்று (27-10-2023) சந்தித்தார். அப்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள, தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு 2021க்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென நேரில் வலியுறுத்தினார்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தையும் வழங்கினார். அக்கடிதத்தில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்தச் செயல்முறை கடந்த காலங்களில் மாநிலத்தில் நல்ல பலன்களை அளித்தது. மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதாலும், அதைத் தொடர்ந்து மத்திய சட்டங்களில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாகவும், பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடைபெற்ற சேர்க்கை முறை நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கிட நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. இராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு 2021 நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநருக்கு 18-9-2021 அன்று அனுப்பப்பட்டது. ஆளுநர் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு, மேற்படி சட்டமுன்வடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குத் திருப்பியனுப்பிய நிலையில் 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவேண்டி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

பின்னர், இந்த சட்டமுன்வடிவு தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இந்தச் சட்டமுன்வடிவு தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய உயர்கல்வித் துறை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்களும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உரிய காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட பிறகும் இந்த விஷயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், குடியரசுத் தலைவருக்கு, 14-8-2023 அன்று கடிதம் எழுதியிருந்தேன். அதில், நீட் தேர்வினால் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மாணவர்கள் தற்கொலைகள் குறித்தெல்லாம் குறிப்பிட்டு, இனியும் தாமதிக்காமல் இந்த  சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென தான் கோரியிருந்தேன். அதோடு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது.

 

இந்தச் சூழ்நிலையில், நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளது. தமிழ்நாட்டில் பரந்த சட்டமன்ற, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தைச் செயல்படுத்திட இயலாமல் முடக்கியுள்ளது. இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என குடியரசுத் தலைவரை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.