Skip to main content

நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்குப் பாத்தியமானது; கோயில் தீட்சிதர்கள் சார்பில் வழக்கறிஞர் பேட்டி

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

Nataraja temple is auspicious for dikshits; Counsel interview on behalf of the Temple Dichadars

 

“தென்னாற்காடு மாவட்ட அரசிதழ் 1878- ஆண்டில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெளியிட்டதைத் தெளிவாகக் குறிப்பிட்டு, அதன் பிரகாரம் தீட்சிதர்கள் நடராஜர் கோயிலுக்குப் பாத்தியமானவர்கள் என்பதை நாங்கள் தெரிவித்துள்ளோம். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பும், உயர்நீதிமன்ற தீர்ப்பும் உறுதி செய்துள்ளன” எனக் கோயில் தீட்சிதர்கள் சார்பில் வழக்குரைஞர் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரன், புதன்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, புதன்கிழமை அன்று சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து பேட்டியளித்துள்ளார். அதற்கு பொது தீட்சிதர் சார்பில் பதிலைத் தெரிவிக்கிறேன். குறிப்பாகக் கடந்த சில மாதங்களாக இந்து அறநிலையத்துறை சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் உள்ள பொது தீட்சிதர்களுக்குத் தொடர்ந்து இடையூறு செய்து சட்டத்திற்கு அப்பாற்பட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

 

அதற்கு பொது தீட்சிதர்கள் சார்பில் ஆட்சேபனையும், பதில்களும் அளிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பொதுவெளியில் அளிக்கப்பட்டுள்ளன. சமீப காலமாகக் குறிப்பாக ஒரு மாத காலத்தில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் சில கைது நடவடிக்கையும், மனித உரிமை மீறல்களும், சிறார்களின் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பரிசோதனைகளையும் செய்யப்பட்டது குறித்துப் பொதுவெளியில் தீட்சிதர்கள் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்குகள் அனைத்தும் தமிழக அரசு விசாரிப்பதில் உள்நோக்கம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு, நடுநிலையான பாரபட்சமின்றி புலன் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தற்போது நாங்கள் கடைசியாக 3-11-2022ல் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் மிகத் தெளிவாகக் கோயில் எவ்வாறு தீட்சிதர்களுக்குப் பாத்தியமானது என்பதற்கு உரிய ஆவணத்தையும், முக்கியமாக தென்னாற்காடு மாவட்ட அரசிதழ் 1878-ஆண்டில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெளியிட்டதையும் தெளிவாகக் குறிப்பிட்டு, அதன் பிரகாரம் தீட்சிதர்கள் கோயிலுக்குப் பாத்தியமானவர்கள் என்பதை நாங்கள் தெரிவித்துள்ளோம். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பும், உயர்நீதிமன்ற தீர்ப்பும் உறுதி செய்துள்ளன என்று தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டியுள்ளோம். ஆனால் நாங்கள் கொடுத்த பதிலைச் சிறிதும் ஏற்காமல் மீண்டும், மீண்டும்  தவறான வகையில் பொதுவெளியில் தீட்சிதர்களுக்குக் கோயில் பாத்தியமானது அல்ல. நாங்கள் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கிறோம் என்று அமைச்சர் கூறுவது ஏற்புடையதல்ல. இந்து அறநிலையத்துறை மீண்டும் கோயில் நிர்வாகத்திற்கு இடையூறு செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்ற அவமதிப்பு குறித்து அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வோம். சட்ட ஆலோசகர்களைக் கலந்தாலோசித்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்