Skip to main content

நாங்குநேரி சம்பவம்; விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Nanguneri Incident Notice of Special Demonstration

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் கடந்த வாரம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் சில மாணவர்கள் அவரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இதுகுறித்து பெற்றோரிடமும் தலைமையாசிரியரிடமும் சின்னத்துரை கூறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

 

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். மேலும் மாணவர் சின்னத்துரையின் தாயாரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.

 

Nanguneri Incident Notice of Special Demonstration
கோப்புப்படம்

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரையை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., நேரில் சென்று நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கு காரணம் நாங்குநேரி சம்பவத்திற்கு முன்பே இங்கு பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. தீவிரவாத பிரிவுகளைக் கண்காணிக்க க்யூ பிராஞ்ச் எனத் தனி உளவுப் பிரிவு இருப்பது போல் சாதி, மதவாத சக்திகளை தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு தனி உளவுப்பிரிவு துவங்க வேண்டும். ஆர்எஸ்எஸ், பாஜக, தமிழகத்தைக் குறி வைத்திருக்கும் நிலையில் ஒரு தனி உளவுப்பிரிவு அவசியம் தேவைப்படுகிறது. நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.