Skip to main content

வீட்டில் தனியாக இருந்த பாஜக நிர்வாகியின் சித்தி கொலை; நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

namakkal bjp member relative passed away

 

நாமக்கல் அருகே, வீட்டில் தனியாக வசித்து வந்த மாவட்ட பாஜக தலைவரின் சித்தியை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை அருகே உள்ள ஒண்டிக்கடையைச் சேர்ந்தவர் பாவாயி (63). இவருடைய கணவர் பொன்னுசாமி, கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மகன் மணி என்கிற கனகராஜ் அபுதாபியில் வேலை செய்து வருகிறார். இதனால், பாவாயி மட்டும் தனது நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு, வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவருடைய வீட்டில் சில நாள்களாக எலக்ட்ரிக்கல் வேலைகள் நடந்து வந்தன. இதற்காக வீட்டின் சுற்றுச் சுவரில் ஒரு ஆள் நுழைந்து சென்று வரும் அளவுக்கு உடைக்கப்பட்டுள்ளது. 

 

வழக்கமாக காலையில் சீக்கிரத்தில் எழுந்து விடும் பாவாயி, வெள்ளிக்கிழமை (பிப். 10, 2023) மதியம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மேலும், வீட்டுக் கதவும் மூடியே இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு, வீட்டு அலமாரியில் இருந்த நகை, பணம் மற்றும் பாவாயி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி, சமையல் அறையில் இருந்த 2 காஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. 

 

இதுகுறித்து அவருடைய உறவினர்கள் ஆயில்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றினர். உடற்கூராய்வுக்காக  சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. நிகழ்விடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரம் மோப்ப நாய் ஓடிச்சென்று மீண்டும் நிகழ்விடத்திற்கே திரும்பியது. விரல் ரேகைப் பிரிவு நிபுணர்கள் நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த தடயங்களைச் சேகரித்தனர். மர்ம நபர்கள், மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

சந்தேகத்தின் பேரில், அவருடைய வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்த எலக்ட்ரீஷியன் மற்றும் உதவியாளர் ஆகியோரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்ததா? மூதாட்டியின் செல்போனில் பதிவாகியுள்ள அழைப்புகளைக் கொண்டும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கொலையுண்ட மூதாட்டி பாவாயி, நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தியின் சித்தி என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நாமகிரிபேட்டை சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்