Skip to main content

நிறுத்தப்பட்ட பணிகளைத் துவங்கும் ஓ.என்.ஜி.சி... எதிர்ப்புத் தெரிவிக்கும் பொதுமக்கள்!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

NAGAI DISTRICT ONGC ISSUES FARMERS

 

நாகை அருகே உள்ள ஓ.என்.ஜி.சி ப்ளாண்டில் ஏற்கனவே பணிகள் நிறுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டுமானப் பொருட்களை இறக்கி ரகசியமாக பணிகளைத் தொடங்கியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

 

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குருவாடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. என்கிற பொதுத்துறை நிறுவனம் கடந்த 2010- ஆம் ஆண்டு பூமியில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்துளை கிணறுகளை அமைத்தது. அதனை பொதுமக்கள் கடுமையாக எதிர்த்ததால் 2012- ஆம் ஆண்டு மூடினர். பிறகு கிடப்பில் போடப்பட்ட பணிகளை மீண்டும் துவங்க இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, கடந்த 2017- ஆம் ஆண்டு குருவாடி, அண்ணா மண்டபம், திருச்செங்காட்டங்குடி உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகினர். 

 

NAGAI DISTRICT ONGC ISSUES FARMERS

 

அதன்பிறகு, கடந்த 2014- ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்திற்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை முடிவில் ஹைட்ரோகார்பனோ, எண்ணெய் எரிவாயுவோ, மீத்தேனோ என எந்தப் பணிகளும் குருவாடி கிராமத்தில் நடைபெறாது, என ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக விவசாயிகளிடம் உறுதி அளித்தது. 

 

இந்தச் சூழ்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கரோனா ஊரடங்கு உத்தரவை பயன்படுத்திக்கொண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் குருவாடி கிராமத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் ரிக் அமைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அந்த இடத்தில் இருந்த கருவேல மரங்களை அகற்றி, கருங்கல், மண், செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை இறக்கி, பில்லர் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

 

NAGAI DISTRICT ONGC ISSUES FARMERS

 

பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக ஓ.என்.ஜி.சி.நிர்வாகம் கூறியுள்ள நிலையில் திடீரென கட்டுமானப் பொருட்கள் இறங்குவதற்கான காரணம் என்ன? கான்கிரீட் வேலைகள் நடைபெற்று இருப்பதற்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்ட கேள்விகளை அப்பகுதி விவசாயிகள் எழுப்பியுள்ளனர். மேலும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், ஆபத்தான பணிகளை ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் நிறுத்த வேண்டும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்கிறார்கள் விவசாயிகள்.

 

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளோ, "குருவாடி கிராமத்தில் போடப்பட்டிருக்கும். ஆழ்துளை கிணற்றில் எந்தவிதமான எரிவாயுவும் கிடைக்கவில்லை. அந்தப் பகுதியில் போடப்பட்டிருக்கும் எரிவாயு எடுப்பதற்கான இயந்திரங்களை அகற்றப்படுவதற்கான வேலைகள் மட்டுமே நடைபெறுகிறது." என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்