அருப்புக்கோட்டை நகராட்சி பொறியாளரான முத்து, அந்நகராட்சியின் பொறுப்பு ஆணையராகவும் செயல்பட்டு வருகிறார். இவர், அருப்புக்கோட்டையில் மின்மயான மேடை ஒப்பந்தப்பணியில் கூடுதலாக செலவழித்த வகையிலான பில் ஒன்றை பாஸ் செய்வதற்காக, சோமசுந்தரம் என்ற கான்ட்ராக்டரிடம் ரூ.28000 லஞ்சம் கேட்டிருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்தி, இன்றைய தினம் முத்துவிடம் ரூ.25000-ஐ கொடுத்திருக்கிறார் சோமசுந்தரம். உடனே, அவர் கணக்காளர் தியாகராஜனிடம் கொடுக்கும்படி கூறியிருக்கிறார். கணக்காளர் தியாகராஜன் லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் பொறி வைத்துப் பிடித்தனர். ஆணையர் (பொறுப்பு) முத்துவும், கணக்காளர் தியாகராஜனும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
‘சாதியைச் சொல்லித் திட்டினாய் என்று உன் மீது வழக்கு போடுவேன்..’ என்று, நகராட்சி அலுவலகத்தில் பலரையும் மிரட்டி வந்திருக்கிறார் நகராட்சி பொறியாளர் முத்து. மேலும், அவர் மீது தொடர்ந்து லஞ்சப் புகார்கள் வந்த வண்ணம் இருந்திருக்கின்றன. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பலரும் யோசித்துவந்த நிலையில், சோமசுந்தரத்தின் லஞ்சப் புகாரில் சிக்கியிருக்கிறார் முத்து.