Skip to main content

''மோடி அரசு நாட்டை விலைபேசி விற்று வருகிறது"-மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

Published on 29/08/2021 | Edited on 29/08/2021

 

 '' Modi government is selling the country at a bargain price '' - Interview with Marxist Secretary K. Balakrishnan!

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று கடலூரில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 

"மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆனால் அப்போது அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் வெளிநடப்பு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் விவசாயிகளுக்கு எதிராக, துரோகம் விளைவித்துள்ளார்கள். 10 மாதமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதம் பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போராட்டத்தை அனைத்து விவசாய சங்கங்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும்.

 

சட்டப்பேரவையில் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்ததை வரவேற்கிறோம். அதே நேரத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இவர்களை சட்ட விரோத குடியேறிகள் என்ற பட்டியலிலே வைத்துள்ளோம். அவர்களை அகதிகள் என்ற பட்டியலில் கூட வைக்க முடியவில்லை. இதற்கு, சர்வதேச அளவில் அகதிகளுக்கான பிரகடனத்தில் மத்திய அரசு கையெழுத்து போடவில்லை. இந்திய அளவிலான சட்டத்தை நிறைவேற்ற குழு அமைத்தும், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போரை வாராவாரம் கையெழுத்து இடுதல் போன்று தீவிரவாதிகளை கண்காணிப்பது போன்று நெருக்கடி அளிக்கப்படுகிறது. எனவே, அவர்களை அகதிகள் என்று அறிவிக்கும் வகையிலான சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக செயல்பட கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.

 

இரண்டாம் அலை கரோனாவை கட்டுப்படுத்தியது, மருத்துவ கட்டமைப்புகளை பாதுகாத்து வைத்திருப்பது, 3 ஆவது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பது, ரூ. 4 ஆயிரம் நிவாரணம், மளிகை தொகுப்பு வழங்கியது போன்ற தமிழக அரசின் 100 நாள் சாதனையை மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் பாராட்டுகிறது.

 

வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டது போல கடந்த அரசின் தவறான கொள்கையால் நிதி நெருக்கடி இருப்பது உண்மை தான். அதனை காரணம் காட்டி மக்கள் மீது அந்த நிதி சுமையை ஏற்றக் கூடாது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு வழங்காதது அவர்கள் தலையில் சுமையை ஏற்றும். கொடுக்கும் வருமானத்தை குறைத்தால் வாங்கும் சக்தி குறையும். எனவே, அரசு இந்த விஷயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

 

புதிதாக மாநகராட்சி, நகராட்சிகள் உருவாக்கும் போது அதில் உள்ள கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்த முடியாது. எனவே, குறைந்தபட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பதவிக்காலம் அமலில் இருக்கும் வரையில் இத்திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். இடைப்பட்ட காலத்தில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்காக தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ.100 கோடி போதுமானது இல்லை. 53 சதவீதம் மக்கள் நகர்புறங்களில் வசிக்கிறார்கள். குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசின் திட்டத்தில் கடந்த தமிழக அரசு இணைத்து விட்டது. இதனால், வீடு பெறுவோர் மத்திய அரசுக்கு ரூ.1.50 லட்சம் கட்ட வேண்டி உள்ளது. இதனால், கலைஞரால் கொண்டு வரப்பட்ட குடிசை மாற்று வாரியம் பயனற்றதாக மாறி வருகிறது. எனவே, இலவசமாக வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டையே விலை பேசி விற்று வருகிறார்கள். அரசு நிறுவனங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது மக்கள் மீது தான் மீண்டும் சுமையை ஏற்றும். எனவே, கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 5 முதல் 15 ஆம் தேதி வரையில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்குவது, 20 முதல் 30 ஆம் தேதி வரையில் அகில இந்திய அளவில் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து மிகப்பெரிய இயக்கம் நடத்த உள்ளோம். மோடி அரசு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் என்ற நிகழ்ச்சியை சுமார் 2000 இடங்களில் நடத்த உள்ளோம். 2024 தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்த அகில இந்திய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன" என்றார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் கோ.மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்