Skip to main content

'திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யமா?'-டி.ஆர்.பாலு பதில்  

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
'Is  MNM in the DMK alliance?'-TR Balu's answer

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுவுடன் இன்று (28.01.2024) மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடந்தது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது . திமுக குழுவினருடன் காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றனர்.

காங்கிரஸ் திமுகவிடம் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளுடன் புதியதாக திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென் சென்னை, அரக்கோணம் ஆகிய 21  தொகுதிகள் அடங்கிய பட்டியலைகொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் இதை காங்கிரஸ் மறுத்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பான திமுக உடனான காங்கிரஸ் மேல்நிலை குழு பேச்சுவார்த்தை நடத்தியது திருப்திகரமாக இருந்ததாக கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளதோடு, திமுகவிடம் தொகுதி பட்டியல் எதையும் வழங்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ''தொகுதி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. எல்லா கட்சிகளும் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். நாங்களும் 40 தொகுதிகளும் திமுக நிற்க வேண்டும் என்று தான் விரும்புவோம். பேச்சுவார்த்தை என வரும் பொழுது, நிறைய கட்சிகள் சேரும் பொழுது எல்லோரும் ஒன்றுபட்டு போக வேண்டும். அதுதான் கூட்டணி.

'Is  MNM in the DMK alliance?'-TR Balu's answer

திமுக 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தமுறை இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் சொல்வேன். வரும் ஒன்பதாம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்'' என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் 'திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா?' என கேள்வி எழுப்பினர், அதற்கு 'யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இடம் கேட்காமல் யார் வேண்டுமானாலும் வரலாம்'' என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் 'மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைய இருப்பதாக சொல்கிறார்களே?' என்ற கேள்விக்கு, 'எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை' என்றார்.

சார்ந்த செய்திகள்