சேலத்தில் இளைஞர்களின் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு, மணியனூரில் 30 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட புதிய டென்னிஸ் மைதானத்தை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் பந்தடித்து தொடங்கி வைத்தனர்.
அதுமட்டுமின்றி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் மணியனூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் ஓடை விரிவாக்கப் பணிகள், 57வது கோட்டத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் ஓடெக்ஸ் ஓடை விரிவாக்கப் பணிகள், 56வது கோட்டத்தில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் நூலக பராமரிப்பு பணிகள், ரத்தினசாமி புரத்தில் ரூ. 50 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைத்து தார்ச்சாலை அமைக்கும் பணிகள், அஸ்தம்பட்டி மண்டலம் 13வது கோட்டத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ. 2.65 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையில் மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிகளில் துணை மேயர் சாரதாதேவி, மண்டலக்குழுத் தலைவர்கள் உமாராணி, அசோகன், தனசேகர் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.