Skip to main content

சின்னப் பள்ளிக்கூடத்திற்கு சிலம்பாட்டத்துடன் 'கல்வி சீர்' கொண்டு சென்ற அமைச்சர்!

Published on 08/05/2022 | Edited on 08/05/2022

 


தமிழகத்தில் கல்வியாண்டின் இறுதி நாட்களில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து கௌரவிக்க விளையாட்டு, இலக்கியப் போட்டிகள் நடத்தி பரிசுகளும், பாராட்டுகளும் வழங்குவது வழக்கம். அதிலும் கரோனா வந்த பிறகு பள்ளி விழாக்களே காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளிகளில் மட்டுமே ஆண்டு விழா, பரிசளிப்பு விழாக்கள் நடந்திருக்கிறது. அதில் ஒன்று தான் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள வடகாடு 'புள்ளாச்சி குடியிருப்பு சின்னப் பள்ளிக்கூடம்'

 

சின்னப் பள்ளிக்கூடமா இருந்தாலும் மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் பாராட்டி பரிசுகளும், மரக்கன்றுகளும் மஞ்சள் பையில் வைத்து வழங்கினார்.

 

முன்னதாக நடந்த கல்வி சீர் வழங்கும் விழாவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைக்க, மேள தாளங்கள் முழங்க பெற்றோர்களும் கிராமத்தினரும் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் தேவையான பொருட்களை சீராக கொண்டு செல்ல ஊர்வலத்திற்கு முன்னால் பேரரசர் சிலம்ப கழக மாணவர்களின் சிலம்பாட்டம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

 

கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை நீண்ட நேரம் சிலம்பம், மான் கொம்பாட்டம், வாள் வீச்சுகளை பார்த்து ரசிக்க, அமைச்சர் மெய்யநாதன் சிலம்பாட்டத்தை பார்த்து வீரர்களை பாராட்டினார். தொடர்ந்து அமைச்சர், எம்எல்ஏ, கல்வி அதிகாரி உள்பட பலரும் கல்விச்சீர் தட்டுகளை பள்ளிக்குக் கொண்டு சென்றனர். வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன், ஒன்றியக்குழுத் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் என்று ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பாராட்டினார்கள். எங்க பள்ளி ஆண்டு விழாவுக்கு நீங்கள் அவசியம் வரணும் என்று பள்ளி குழந்தைகளே வீடு வீடா போய் தாம்பூலத்தில் பாக்கு, வெத்தலை வைத்து அழைப்பிதழ் கொடுத்து அழைத்ததால் எந்த பெற்றோரும் வராமல் இல்லை. திறந்தவெளி மேடையில் சின்னப் பள்ளிக்கூட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், நாடகங்களும் பெற்றோர்களை கவர்ந்தது. ஒரு பள்ளி ஆண்டு விழாவை ஊரே சேர்ந்து கொண்டாடியது.

 

விழா மேடையிலேயே அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உறுதி அளித்ததோடு ஸ்மார்ட் வகுப்பறைக்கான தொகையினை அமைச்சர் மெய்யநாதன் மேடையிலேயே வழங்கினார். மேலும் அவர் பேசும் போது.. ''நானும் அரசுப் பள்ளியில் படித்துத்தான் வளர்ந்தேன். பல நாள் பட்டினியோடு படித்தேன். படிப்பு ஒன்று தான் அழியாத செல்வம். அதனால் பெற்றோர்களே பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். அதோடு விளையாட்டையும் தடுக்காதீர்கள். விளையாட்டு மாணவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்