Skip to main content

‘நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கவனத்திற்கு’ - அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
Minister Thangam thennarasu important announcement on Nellai, Thoothukudi electricity tariff extension' -

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு செய்வதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது. மேலும், மின் உபயோகிப்பாளர்களின், மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த 02.01.2024 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு கூடுதல் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 02.01.2024 வரை இருந்த நிலையில், அபராதத் தொகை இல்லாமல் 01.02.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மேலும், இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்’ என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

துரை வைகோ சொன்ன குட்டி ஸ்டோரி; விருதுநகர் நிகழ்ச்சியில் நடந்த சுவாரசியம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 The short story told by Durai Vaiko; the minister answered on the stage!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அமைந்துள்ளது விஸ்வநத்தம் கிராமம். இப்பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் குப்பை மேடாகப் பயனற்று நில மாசுபாட்டை ஏற்படுத்தி வந்தது. இதையறிந்த விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், குப்பை மேடாகப் பயனற்றுக் கிடந்த அரசு நிலத்தை மீட்டு குறுங்காடு அமைக்கத் திட்டமிட்டனர். விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அன்றாடம் வேலை செய்யும் எளிமையான பின்னணியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி அரசிடம் அனுமதி கேட்டு பணிகளைத் துவங்க வேண்டும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்துள்ளது. 

இந்த நிலையில் தான், விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் பணியைப் பார்த்து பாராட்டிவிட்டு தனிப்பட்ட செல்போன் எண்ணை கொடுத்துவிட்டுச் சென்ற மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் ஞாபகம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு வந்துள்ளது. உடனே அவர்கள் செல்போனில் தகவல் தெரிவித்து குறுங்காடுகள் அமைக்க உதவி கேட்க, பணிகள் தொடங்க அனைத்து உதவிகளையும் துரை வைகோ ஃபோன் மூலமே செய்து கொடுத்துள்ளார். செல்போனில் குறுங்காடு அமைக்கும் குழுவினரிடம் நம்பிக்கை தெரிவித்த துரை வைகோ, உடனே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் கொடுக்க அமைச்சரும் தமிழக அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, குறுங்காடு அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஊராட்சி தலைவரிடம் பேசி குப்பைகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தார். 

இந்த கூட்டு முயற்சியால் முதற்கட்டமாக விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக மரக் கன்றுகளை நட்டு நிகழ்வினை சிறப்பு விருந்தினர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையினை அமைச்சர்களிடம் பெற்று விஸ்வவனம் அறக்கட்டளையிடம் துரை வைகோ ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த திட்டச் செயலாக்கத்திற்காக துரை வைகோவையும் தொடர்புடைய நிர்வாகிகளையும் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினர். நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக குறுங்காட்டிற்கு 14 மாதங்களாக துரை வைகோ மேற்கொண்ட  முயற்சிகள் 7 நிமிட குறும்படமாக LED திரையில் திரையிடப்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய  துரை வைகோ, 'விதைப்பது ஒரு முறை வாழட்டும் தலைமுறை' குறுங்காடு திட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, குறுங்காட்டில் 30க்கும் மேற்பட்ட நாட்டு மரங்கள் நட இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 14 மாதங்களில் தான் கொடுத்த வாக்கை செய்து காட்டிய பின்னணியை தனது கட்சியின் தலைவரும் தந்தையுமான வைகோவை முன்னிறுத்தி திருக்குறளுடன் ஒப்பிட்டுப் பேசினார். மேடையில், அண்ணன் தங்கம் தென்னரசு என அழைத்து, இருவருக்கும் 2 தலைமுறையாக இருக்கும் உறவு பந்தத்தை எடுத்துக்காட்டி பேசினார். தொடர்ந்து பேசியவர், ''நான் நல்லா இருக்கணும் என எப்போதும் நினைக்கிறது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், அமைச்சர் தங்கம் தென்னரசு..'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து உணர்வுப்பூர்வமாக பேசிய  துரை வைகோ, குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். அதில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் நிகழ்ச்சிக்கு நேரம் வாங்க சென்றதாகவும், அப்போது அன்புடன் பேசிய அமைச்சர், ''உங்க அப்பா தான் புலி புலினு இருந்தார்னா.. நீ மரம் செடி கொடின்னு இருக்கியே.. சீட்டு வாங்கி அரசியல் வேலை பாரு..'' என அன்புடன் கடிந்துகொண்டதாகவும், அதற்கு ''நான் இல்லாத காலத்திலும் இதை அமைத்துத் தந்தவன் வைகோ மகன். அவனது கட்சி என்பார்கள். அதுவே போதும். இந்த 32 ஏக்கர் குறுங்காடு எனது சின்ன உதவி..'' என சொல்லியதாக எல்லோர் மத்தியிலும் இருவருக்குள் நடந்த நிகழ்வை கூறினார். 

நிகழ்வில் இருந்த பத்திரிகையாளர்களை குறிப்பிட்டு பேசியவர், ''தான் அரசியலில் போட்டியிட இங்கு வரவில்லை..'' எனத் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து தனது உரையின் முடிவில் பேசியவர், தமிழக அரசின் பசுமைத் திட்டம் பற்றியும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் விஸ்வ வனம் அமைப்பை பற்றியும் பெருமிதத்துடன் பேசினார். இறுதி வரியாக, ''உங்களுக்கு ஊர் பிடிக்கலன்னா வேற ஊர் போய்டலாம். மாநிலம், நாடு புடிக்கலன்னா வேற இடம் போயிடலாம். ஆனா நம்ம பூமித்தாய விட்டு நம்ம எங்கேயும் போக முடியாது. ஒன்று சேர்ந்து பூமியை பாதுகாப்போம்..'' என சூளுரைத்து தனது உரையை துரை வைகோ முடித்துக்கொண்டார்.

இதையடுத்து, பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "துரை வைகோவை அரசியலுக்கு கொண்டு வந்து கெடுத்தது நான் தான். அவர் தற்போது அரசியல் முழு நேர ஊழியர் ஆகிவிட்டார். வைகோவிடம், `உங்களுக்கு பின்பு இந்தக் கட்சியை வழி நடத்த ஒரு ஆள் தேவை. அதற்கு துரை வைகோ பொருத்தமானவர். அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்..’ எனக் கூறி அரசியலுக்கு சம்மதம் தெரிவிக்க வைத்ததாக நெகிழ்ச்சியுடன் பேசினார். தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டி பேசினார். இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைப்பதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.