எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா பேனர்களை அகற்றக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நாளை காலை விசாரிக்கிறது.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். பிறந்த தின நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அரசு விழாவாக நாளை மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை வரவேற்பதற்காக சென்னை அண்ணா சாலை, பசுமை வழி சாலை, கிண்டி ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றால் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதால் விதிமீறல் பேனர்களை அகற்றக்கோரியும், அவர்கள்ன் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையில் டிராபிக் ராமசாமி புகார் அளித்தார்.
அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே தஹிலரமானியிடம் முறையிட்டதையடுத்து, நீதிபதி எஸ்.மணிக்குமார் அமர்வு விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதன் நகலை அரசு தரப்புக்கு கொடுக்க பதிவுத்துறை அறிவுத்தியுள்ளதால், நாளை காலை அரசு தரப்புக்கு கொடுத்தவுடன் காலை 10 மணியளவில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.