Skip to main content

மக்கள் திலகம் என்னும் அந்தப் பெருமழையின் ஈரம் 

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
m

 

குண்டுபாய்ந்ததில் தொண்டையில் ரணம் இருப்பதால் மூன்று மாதத்திற்கு டயலாக் பேசக்கூடாது; பைட் பண்ணக்கூடாது பாடக்கூடாது....பாடுவது மாதிரி மூவ்மெண்ட் வேணும்னா கொடுக்கலாம் என்று டாக்டர் அட்வைஸோடு டிச்சார்ஜ் ஆனார் எம்.ஜி.ஆர்.

 

அந்த சமயத்தில் பெற்றால்தான் பிள்ளையா படத்தின் 100-வது நாள் விழா ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்தது. அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு விழாவில் அண்ணா எல்லோருக்கும் கேடயம் பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

மாமா நாகராஜராவ் வெளியூரில் உள்ள காரணத்தால் அவரின் சார்பில் அவர் உதவியாளர் இந்த கேடயத்தை வாங்கிக்கொள்வார் என்று அறிவித்ததும், நான் (எ.சங்கர்ராவ்)மேடைக்கு போனேன். அண்ணா எனக்கு கேடயத்தை கொடுத்துவிட்டு, ‘தம்பி, எப்படி இருக்க..?’ என்று விசாரித்தார்.

 

அண்ணாவுக்கு அருகில் எம்.ஜி.ஆர். உட்கார்ந்துகொண்டிருந்தார். ’ஸ்ஸ்சங்கர்.....’என்று மெல்ல எம்.ஜி.ஆர். குரல் கேட்டதும் திரும்பினேன். தொண்டையில் ரணம் இருந்ததால் அவரால் சரியாக பேசமுடியல. வாய் குளறி குளறி...’நாளை குடியிருந்த கோயில் ஷூட்டிங் இருக்கு. நீ வந்துடு’ என்றார்.

 

சுடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு முதன் முதலாக குடியிருந்த கோயில் படத்தில் நடிப்பதற்காக சத்யா ஸ்டூடியோவிற்கு வந்தார் எம்.ஜி.ஆர்.

அவர் பிழைத்து வந்ததே பெரிய விசயம். ஷூட்டிங்கில் எல்லாம் கலந்துப்பாரா என்று நினைத்திருந்தவர்கள் அவர் மீண்டும் நடிக்கிறார் என்றதும் நேரில் பார்க்க பல விஐபிக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். 

 

படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஆளுயுர மாலை கொண்டு வந்து போட்டு எம்.ஜி.ஆர். காலில் விழுந்தார்.

 

சத்யா ஸ்டூடியோவிற்கு வெளியே மக்கள் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. தள்ளுமுள்ளு அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதைக்கவனித்துவிட்ட எம்.ஜி.ஆர். , அவர்களை உள்ளே அனுப்புங்க என்று சொல்லிவிட்டார். கேட்டை திறந்ததும் தான் போதும். திபு திபுன்னு மொத்த கூட்டமும் வந்துவிட்டார்கள்.

‘’உன் விழியும் என் வாலும் சந்தித்தால்....’’என்ற பாடலுக்கு அவர் ஆடினார். அந்த பாடலுக்கு சரியாக வாயசைக்கிறாரா என்று மொத்த கூட்டமும் அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தது.

 

அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி(சுடப்பட்ட சம்பவம்) எம்.ஜி.ஆர். எப்போதும் போல் பாடலுக்கு வாயசைத்துக்கொண்டிருந்தார்.

அதுமட்டுமா அவர் துள்ளிக்குதித்து ஆடியதும், ஆஹா வாத்தியார் நல்லாயிட்டாரு என்று மொத்த கூட்டமும் துள்ளிக்குதித்தது.  குடியிருந்த கோயிலுக்கு முதலில் வைத்த பெயர் சங்கமம். தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.

இதற்கு மறுநாள் வாகினி ஸ்டூடியோவில் காவல்காரன் படத்தின் ஷூட்டிங். அங்கேயும் கூட்டம், தள்ளுமுள்ளுவை பார்த்ததும் உள்ளே விடச்சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.

 

எம்.ஜி.ஆருக்கு ஒரு வில் பவர் இருக்கு. அவர் உடம்புக்கு சரியில்லேன்னாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார். அது தெரியாத அளவுக்கு எப்போதும் போல் இருப்பார்.

வாகிணியில் நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்ற பாடலுக்கு ஆடினார். நான் நல்லா இருக்கேன். உடம்புக்கு எந்த குறையும் இல்லை என்பதை உணர்த்த துள்ளிக்குதித்து ஆடினார். பொதுவாகவே எம்.ஜி.ஆர்.  ஒரு இடத்தில் நின்று பாடமாட்டார். அங்கே இங்கே ஓடி ஆடி பாடுவார். அதே மாதிரி செய்ததும் பழையபடி பார்க்க முடியாதா என்று ஏங்கிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் எல்லோரும் சந்தோசத்தில் வெகு நேரம்  உரக்க சத்தம் எழுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

 

tharani

 

தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.  : மக்கள் திலகத்தின் ஆஸ்த்தான புகைப்படக்கலைஞர் ஆர்.என்.நாகராஜராவ். அவரின் மருமகனும், உதவியாளருமான எ.சங்கர்ராவ், மக்கள் திலகத்தின் 34 படங்களுக்கு பணிபுரிந்திருக்கிறார். அந்த வகையில் மக்கள் திலகம் பற்றி அணு அணுவாய் அறிந்து வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று மக்கள் திலகம் பற்றிய நினைவுகளை சங்கர்ராவ் சொல்ல எழுத்தாக்கம் செய்திருக்கிறார் கதிரவன். 

இதை படிக்கும்போது மக்கள் திலகத்தின் கொடையுள்ளம், அன்பு,பாசம், வீரம், தன்னம்பிக்கை,உழைப்பு, சிரிப்பு, அழுகை, எல்லாம் கண் முன் தெரிகிறது.

 

(டிசம்பர் -24 இன்று 31வது நினைவு தினம்)அவர் மறைந்து 31 ஆண்டுகள் ஆனபின்னும் மக்கள் திலகம் என்னும் அந்தப் பெருமழையின் ஈரம் கொஞ்சமும் காயாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது. கோடான கோடி பேர் அந்த ஈரத்திலேயே நிற்கிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் இந்த புத்தக காற்று குளிர்வீசும்; சிலிர்க்க வைக்கும்.

 

நூல்: தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.
வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,  விலை:175.00

 

 

சார்ந்த செய்திகள்