Skip to main content

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு; அமைச்சர் கே.என். நேரு தகவல்  

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

mettur dam water opening for cauvery delta region cm mk stalin

 

சேலத்தில் கலைஞர் சிலை திறப்பு மற்றும் அவருடைய நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்க விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூன் 11 ஆம் தேதி சேலம் வருகிறார்.

 

இது தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக வரலாற்றில் முத்திரைச் சாதனைகள் பல படைத்தது சேலம் மாவட்டம். சேலத்திற்கு இரும்பாலை, ரயில்வே கோட்டம், அரசு மருத்துவக் கல்லூரி, மாநகராட்சிக்காக 283 கோடி ரூபாயில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், 183 கோடி ரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டம், 136 கோடி ரூபாயில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஏத்தாப்பூரில் மரவள்ளிக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம், ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா, ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர். அவரைப் போலவே, சேலம் மாவட்ட வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த அரசு விழாவில் 1242 கோடி ரூபாயில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

 

இந்நிலையில் ஜூன் 11 ஆம் தேதி, சேலம் மாநகருக்கு வருகை தரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவச் சிலையைத் திறந்து வைப்பதுடன், அவருடைய நூற்றாண்டு பிறந்த நாள் விழாவைத் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். ஜூன் 12 ஆம் தேதி, காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்காக சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கிடுவோம். இது தொடர்பாக ஆலோசிக்க, மே 30 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு, சேலம் 5 சாலை ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் என் தலைமையில் நடத்தப்பட உள்ளது.

 

இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, கிளை நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கிட வேண்டும்" என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.