Skip to main content

300 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் மாதாவின் முதல் தேர்பவனி!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Mata first Chariot Festival 300 years ago

350 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தேவாலயத்துக்கும், குருக்களுக்கும், சிஷ்யர்களுக்கும் எட்டையபுரம் பாளையக்காரர்களான செகவீர மற்றும் திசவீர எட்டப்ப நாயக்கர்கள் பாதுகாப்புக் கொடுத்ததையும், இரு சமுதாயத்தினரிடையே சாதி நிமித்தம் ஏற்பட்ட மனஸ்தாபம், தீர்க்கப்பட்டதையும் அங்குள்ள இரு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டுக்கு போர்ச்சுகீசியர்கள் வணிகம் செய்ய வந்தபோது, சேசுசபை மூலம் கத்தோலிக்க கிறித்துவம் பரவியது. அச்சமயம் மதுரை சேசுசபையினரால், கி.பி.1600-ல் காமநாயக்கன்பட்டியில் ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டது. இங்கு புனித அருளானந்தர், வீரமாமுனிவர் ஆகியோர் சமயப் பணி ஆற்றியுள்ளனர். 300 ஆண்டுகளுக்கு முன் கத்தோலிக்கத் திருத்தலத்தில் மாதாவின் தேர்பவனி தமிழ்நாட்டில் முதன்முறையாக வீரமாமுனிவர் காலத்தில் இங்குதான் தொடங்கப்பட்டது. அதன் சாட்சியாக பூவரச மரத்தில் செய்யப்பட்ட மிகப் பெரிய இரு தேர்கள் இன்றும் உள்ளன.

எட்டையபுரம் பாளையக்காரருக்கு நன்கு அறிமுகமான சேவியர் போர்க்கீசு என்ற பாதிரியார் இங்கு பணிபுரிந்தபோது, திசவீர எட்டப்ப நாயக்கர் நேரில் வந்து ஆலயத்துக்கு யாரும் இடையூறு கொடுக்கக் கூடாது என ஆணையிட்டு கொல்லம் ஆண்டு 863-ல் கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளார். தேவாலய முன் வாசலின் தென்பகுதியில் உள்ள கல்வெட்டின் தற்போதைய ஆண்டு கி.பி.1688 ஆகும். இக்கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்து ஆய்வு செய்தபின் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது,

முதல் கல்வெட்டு

செகவீர எட்டப்ப நாயக்கரவர்கள் நம்முடைய சீமையிலே சறுவேசுரனுடைய இந்தக் கோவிலும் ரோமாபுரிச் சன்னாசிகளுடைய மடமும் நம்முடைய தகப்பனார் காலத்திலே இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன் ஒரு விக்கனமும் இல்லாமல் நடத்திக் கொண்டு வந்ததினாலே இப்போது நாமும் அப்படி தானே நடத்திவிக்க வேணுமென்று இந்தக் கோவிலும் இதிலே இருக்கப்பட்ட குருக்களையும் வந்து சந்திச்சு இப்படிக்குக் கல்லும் வெட்டி விச்சுக் குடுத்தோம். ஆனபடியினாலே இந்தச் சறுவேசுரனுடைய கோவிலுக்கும் குருக்களுக்கும் அவர்களுடைய சிஷ்யர்களுக்கும் யாதொரு விக்கினம் பண்ணுகிறவன் நமக்குத் துரோகியாய்ப் போறதுமில்லாமல் கெங்கைக் கரையிலே காராம் பசுவையும் பிராமணரையும் கொன்ன தோஷத்திலே போவாராகவும். இப்படிக்கு சந்திர, சூரியன் உள்ள வரைக்கும் கட்டளை இட்டோம். திசவீர எட்டப்பனாயக்கர் சுவாமி லட்ச சித்து என 31 வரிகள் கொண்ட கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

விளக்கம்

Mata first Chariot Festival 300 years ago

எட்டையபுரம் பாளையக்காரர் செகவீர எட்டப்பநாயக்கர் கி.பி.1663ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கு தன்னுடைய சீமையில் உள்ள சறுவேசுரன் கோவில் மற்றும் ரோமாபுரி சன்னாசிகள் மடம் ஆகியவற்றிற்கு எந்த இடையூறுமின்றி அதற்குப் பாதுகாப்புக் கொடுத்து நடத்திக் கொண்டு வந்திருக்கிறார். தன் தகப்பனார் செய்ததை, தானும் அப்படியே தொடர்ந்து நடத்த விரும்புவதாக, இந்தக் கோவிலுக்கு வந்து இங்கிருந்த குருக்களை கி.பி.1688-ம் ஆண்டு சித்திரை மாதம் 10-ம் நாள் சந்தித்து அதைக் கல்வெட்டாகவும் வெட்டிக் கொடுத்துள்ளார் அவர் மகன் திசவீர எட்டப்ப நாயக்கர்.

கல்வெட்டின் இறுதியில் வரும் ஓம்படைக்கிளவி ஆட்சியாளர்களால் கொடுக்கப்படும் தர்மத்துக்கு, யாராவது கெடுதல் செய்தால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிக் கூறுவதாகும். இக்கல்வெட்டின் ஓம்படைக்கிளவி, இந்தச் சறுவேசுரனுடைய கோவிலுக்கும், குருக்களுக்கும் அவர்களுடைய சிஷ்யர்களுக்கும் ஏதாவதொரு பிரச்சனை பண்ணுகிறவன் தனக்குத் துரோகியாவான் என்றதன் மூலம் எட்டையபுரம் பாளையக்காரர்கள் பல தலைமுறைகளாக இத்தேவாலயத்தை பாதுகாத்து வந்துள்ளதை அறிய முடிகிறது.

விஜயநகர, நாயக்கர் கால சைவ, வைணவக் கோயில் கல்வெட்டுகளில் சொல்லப்படும் ஓம்படைக்கிளவி இக்கல்வெட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இத்தேவாலயம் பலமுறை எரிக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் வந்துள்ளது. மீண்டும் மீண்டும் இதைக் கட்டி எழுப்பியிருக்கிறார்கள். இத்தகைய இடையூறுகளை முடிவுக்குக் கொண்டுவர எட்டையபுரம் பாளையக்காரரின் இக்கல்வெட்டு உறுதுணையாக இருந்துள்ளது. கத்தோலிக்க கிறித்துவ ஆலயங்கள், அக்காலக் கல்வெட்டு, செப்பேடுகளில் சறுவேசுரன் கோவில் எனப்படுவது போல இதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mata first Chariot Festival 300 years ago

இத்தேவாலயத்தின் முன் வாசலின் வடக்குப் பகுதியில் 59 வரிகள் கொண்ட மற்றொரு கல்வெட்டு கட்டுவிக்கப்பட்டுள்ளது. பரலோக மாதா தேவாலயத்தோடு சேர்ந்த ரோமன் கத்தோலிக்க கிறித்துவர்களான இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையில் சாதி நிமித்தம் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் இத்தேவாலயத்தை விட்டு விலகி குருவிநத்தத்தில் புதியதாக ஒரு தேவாலயம் கட்டிக் கொள்ள ஒரு சமுதாயத்தினர் மற்றொரு சமுதாயத்தினருக்கு, ரூபாய் 1633 கொடுத்து இருவரும் சேர்ந்து பொது ஆண்டு டிசம்பர் 1, 1863இல் எழுதிக் கொண்ட உடன்படிக்கையை முதலில் பத்திரமாக எழுதி, அதன் சரியான நகலை மார்ச் 8, 1864இல் கல்வெட்டாக வெட்டி தேவாலயத்தின் முன்புறம் வைத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சார்ந்த செய்திகள்