Skip to main content

“பப்ளிக்க அடிச்சிடுவியா...” - காவலருடன் வாக்குவாதம்; வைரலாகும் வீடியோ

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
 man fights with a traffic cop in Coimbatore

கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி நகர்ப்புற பகுதிகளில் உள்ள கிழக்கு, மேற்கு தாலுகா, மகாலிங்க புரம், பொள்ளாச்சி நகராட்சி, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், தேர் முட்டி, பல்லடம் ரோடு, காந்தி கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு, ஹெல்மெட், சீட் பெல்ட், குடி போதையில் வரும் நபர்கள் ஆகியோரை கண்காணித்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜனவரி 6 ஆம் தேதி பொள்ளாச்சி காந்தி சிலை ஸ்டேட் பேங்க் முன்பு போக்குவரத்து தலைமைக் காவலர் இளையராஜா வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த நபர் சீட் பெல்ட் அணியாமல் வந்ததாகத் தெரிகிறது. அந்த நபரின் காரை அங்கு வாகனச் சோதனை செய்து  கொண்டிருந்த தலைமைக் காவலர் இளையராஜா கவனித்து மடக்கியுள்ளார். மேலும், அவரிடம் சீட் பெல்ட் அணியாமல் வந்ததற்கு அபராதம் வசூலிக்க முற்பட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற, அதனைத் தலைமைக் காவலர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வாக்குவாதம் செய்யும் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டி வந்த நபர், ''பப்ளிக்கில் வீடியோ எடுக்குறீயா...'' என வாக்குவாதம் செய்கிறார். அப்போது, போக்குவரத்து தலைமைக் காவலர் இளையராஜாவுக்கும் அந்த நபருக்கும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அதனை காரை ஓட்டி வந்த நபரின் மனைவி தடுக்கிறார். அப்போது, போக்குவரத்து தலைமைக் காவலர் இளையராஜா காரை ஓட்டி வந்த நபரை கைகளால் தடுக்க முற்படும்போது, வாக்குவாதம் செய்த நபர், ''என்ன அடிச்சிடுவியா.. நீ அடிடா பார்க்கலாம்?'' என கத்தி கூச்சலிடுகிறார்.

தொடர்ந்து, பேசும் அந்த நபர், “அடிச்சிடுவியா பப்ளிக்க? நீ அடிச்சிடுவியா பப்ளிக்க?” எனக் கத்தி கூச்சலிடுகிறார். அங்கு வைக்கப்பட்டிருந்த செல்போன் கேமராவில் எல்லாம் பதிவு செய்யப்படுகிறது என்பதை அறிந்துகொண்ட காரை ஓட்டி வந்த நபரின் மனைவி, வாக்குவாதம் செய்யும் கணவரை தடுக்கிறார். மேலும், தொடர்ந்து பேசும் அந்த நபர், ''அவங்கலாம் வராங்க அதைக் கேட்க வக்கு இல்லை.. இதை வீடியோ எடுக்கிற'' என மீண்டும் மீண்டும் போக்குவரத்து தலைமைக் காவலர் இளையராஜாவை ஒருமையில் பேசுகிறார்.

இதையடுத்து, சத்தம் கேட்டு கூட்டம் கூட பொள்ளாச்சி காந்தி சிலை ஸ்டேட் பேங்க் முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உடனே, அங்கு பணியிலிருந்த போக்குவரத்து தலைமைக் காவலர் இளையராஜா போக்குவரத்தை சரி செய்யும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி இருந்தது. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட முழுமையான காரணம் குறித்து உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, இந்த வீடியோவிற்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறுபட்ட கருத்துகள் வெளியாகி வருகிறது. இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்