Skip to main content

சமூக பாதுகாப்பு திட்டத்தில் முறைகேடு; திருநங்கைகள் இருவர் உள்பட மூவர் கைது

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

Malpractice in the Social Security Scheme Three arrested including two transgenders

 

சேலத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரின் பேரில் திருநங்கைகள் இருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 

சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலக சமூகப் பாதுகாப்புத்திட்டப் பிரிவு மூலமாக கணவரை இழந்த பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் யார் யாருக்கு எவ்வளவு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படும். அதன்படி கடந்த 2020ம் ஆண்டுக்குரிய பயனாளிகளின் விவரங்களை மாநில கணக்காயர் அலுவலகம் மூலம் தணிக்கை செய்யப்பட்டது. இதில், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் பாலம்பட்டியைச் சேர்ந்த பவித்ரா (வயது 21), சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்த திருநங்கை சாந்தி, குகை பகுதியைச் சேர்ந்த மற்றொரு திருநங்கை மாதம்மாள் ஆகியோரின் வங்கி கணக்கிற்கு தாறுமாறாக அரசின் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

 

திருநங்கை சாந்தியின் வங்கி கணக்கில் ஒரே நாளில் 68460 ரூபாய் செலுத்தப்பட்டு இருந்தது முதல்கட்ட தணிக்கையில் தெரிய வந்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அவருடைய வங்கி கணக்கை தீவிரமாக ஆய்வு செய்தபோது 2020ம் ஆண்டில் மட்டும் சாந்தியின் வங்கி கணக்கில் மொத்தமாக 65 லட்சத்து 78 ஆயிரத்து 900 ரூபாய் செலுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மற்றொரு திருநங்கையான மாதம்மாள் வங்கிக் கணக்கில் 8 லட்சம் ரூபாயும், தற்காலிக பணியாளர் பவித்ராவின் வங்கிக் கணக்கில் 23 லட்சத்து 39 ஆயிரத்து 861 ரூபாயும் செலுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

 

இதையடுத்து அவர்களிடம் இருந்து பணத்தை மீட்பதற்காக, தவறுதலாக வரவு வைக்கப்பட்ட தொகையை அரசு கருவூலத்தில் திருப்பிச் செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் தொடர்ந்து பணத்தைச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதையடுத்து சேலம் தெற்கு வட்ட சமூகப் பாதுகாப்புத்திட்டத்தின் தனி வட்டாட்சியர் தமிழ் முல்லை, மூன்று பேர் மீதும் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். உதவி ஆணையர் சூர்யா, ஆய்வாளர் ஜெய்சல்குமார் ஆகியோர் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மூன்று பேரும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். பவித்ராவிடம் விசாரித்தபோது, தனது வங்கிக் கணக்கில் வந்த பணத்தின் மூலம் நிலம் வாங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். திருநங்கை சாந்தி, தனக்கு ஹெச்ஐவி தொற்று உள்ளதால், அதற்கான சிகிச்சை செலவுக்காக பணத்தை எல்லாம் செலவழித்து விட்டதாகவும், மற்றொரு திருநங்கை மாதம்மாள், தன் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வந்தது என்றே தெரியாது என்றும், சக திருநங்கைகள்தான் தனது வங்கிக் கணக்கை இயக்கி வருவதாகவும் கூறியுள்ளனர்.

 

இதையடுத்து பவித்ரா, திருநங்கைகள் இருவர் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இது ஒருபுறம் இருக்க, திருநங்கை சாந்தி தன் வங்கிக் கணக்கில் வந்த பணத்தை உறவினர்களிடம் கொடுத்து ரகசியமாக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. மூவரின் வங்கி கணக்குகளிலும் விதிகளை மீறி பணம் சென்றது எப்படி. சமூகப் பாதுகாப்புத்திட்ட ஊழியர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மூவரிடம் இருந்தும் பணத்தை மீட்கவும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருநங்கைகள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சேலத்தில உள்ள ஏராளமான திருநங்கைகள் மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரம், மாநிலம் முழுவதும் சமூகப்பாதுகாப்புத் திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் பரவலாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்