Skip to main content

ஜெயலலிதா மீன்வள பல்கலை.யில் முறைகேடு; கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற தேர்வு கட்டுப்பாட்டாளர்

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

Malpractice in Jayalalitha Fisheries University; Controller of Examinations who received bribes worth crores

 

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில் முறைகேடாகச் சேர்ந்த 37 மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட இருவர் தற்காலிகப் பணியிடை நீக்கமும் செய்துள்ளனர்.

 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நாகை மாவட்டம் தலைஞாயிறு, பொன்னேரி, சென்னை, தூத்துக்குடி ஆகிய ஆறு இடங்களில் உறுப்புக்கல்லூரி துவங்கப்பட்டுள்ளன. இந்த உறுப்புக்கல்லூரியில் மீன்வள அறிவியல் பிரிவில் 120 இடங்கள், மீன்வளப் பொறியியல் பிரிவில் 30 இடங்கள், ஆற்றல் மற்றும் சூற்றுச்சூழல் பிரிவில் 20 என 250 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்காக ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கப்பட்டு, பிறகு கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

 

இந்தநிலையில், பல்கலையின் கீழ் இயங்கும் டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்கு ஆண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு 2021-2022 மற்றும் 2022-2023 மாணவர் சேர்க்கையில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

 

இந்த முறைகேட்டில் தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பி.ஜவகர் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்து மாணவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தமிழக அரசும், பல்கலைக்கழகமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழகம் மற்றும் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கமிட்டி விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.

 

முதற்கட்டமாக தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பல மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியில்லாதவர்கள் இளநிலை மீன்வளப் பட்டப் படிப்புகளில் சேர்க்கை வழங்கியதால் பெரும் ஊழல் நடந்துள்ளதும், கட்-ஆஃப் (190-க்கு 127) மதிப்பெண்களுக்குக் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

 

தகுதியற்றவர்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் என மொத்தமாக கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பி.ஜவகர் 32 மாணவர்களை இங்கு சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்ட தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பி.ஜவகர் தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் லஞ்சம் பெற அவருக்கு யார் யாரெல்லாம் துணையாக நின்றார்கள் என்பது குறித்தும் தமிழக மீன்வளத்துறை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

இதனிடையே தலைஞாயிறு, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் BFSC பட்டப்படிப்பில் முறைகேடாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 32 மாணவ மாணவியர் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முறைகேடாகச் சேர்ந்த மாணவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. 32 மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்கிற கவலை அவர்களது பெற்றோர்களுக்கு எழுந்துள்ளது. 

 

மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகார்களைத் தொடந்து, தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். ஜி.சுகுமாரிடம் கேட்டபோது, இதுகுறித்து பல்கலைக்கழகம் மற்றும் அரசு தரப்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், கமிட்டியின் அறிக்கைக்காக காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

 

மேலும் கையூட்டு எவ்வாறு? யார் மூலம் பெற்றார்கள் என்பது குறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும் அவர்கள் மீது நிச்சயம் பல்கலைக்கழகம் மற்றும் அரசு சார்பில் நடவடிக்கை பாயும் என்றார்.

 

இதனிடையே பல்கலைக்கழக வளாகம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் உட்பட இரண்டாம் ஆண்டு படித்து வரும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த மாணவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. குறைவான மதிப்பெண் பெற்ற நீங்கள் எப்படி பட்டப்படிப்பில் சேர்ந்தீர்கள்; கலந்தாய்வில் பங்கேற்றீர்களா; அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? கலந்தாய்வின் போது கையெழுத்து இட்டீர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையானது, பல்கலைக்கழக வளாகம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் நடைபெற உள்ளன.

 

நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில், இளநிலை மீன்வளப் அறிவியல் பட்டப் படிப்பு சேர்க்கை விவகாரத்தில், பல கோடி ரூபாய் கையூட்டு பெற்ற பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜவகர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவமும், இதில் முறைகேடாக சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதத் தடை விதித்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட தகவல் பல்கலைக்கழக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.