Skip to main content

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு..! உதவி பொதுமேலாளர் உட்பட 5 பேர் பணி இடைநீக்கம்..! 

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

Madurai aavin 5 people including assistant general manager suspended ..!

 

ஆவின் நிறுவனத்தில் பால் உபபொருட்கள் விற்பனையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக, உதவி பொதுமேலாளர் உட்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 

மதுரை ஆவின் நிறுவனத்தில், தினமும் கொள்முதல் செய்யப்படும் பாலை, பாக்கெட்டுகளாக அடைத்து விற்பனை செய்யப்படுவது போக, தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு உபபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆவின் நிறுவனத்தின் உபபொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு என்பதால், இதன் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

 

இதனிடையே, மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. இதில், பால் உபபொருட்கள் விற்பனையில் ரூ .13.71 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

 

இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் கே. நந்தகோபாலுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், அதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, சென்னை ஆவின் துணைப் பதிவாளர் அலெக்ஸ் தலைமையிலான அலுவலர்கள் குழுவினர், கடந்த 10 நாட்களாக தணிக்கையில் ஈடுபட்டனர். 

 

அதில், உபபொருட்கள் விற்பனையில் ரூ.13.71 கோடி முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, இது தொடர்பாக உதவி பொது மேலாளர்கள் கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன் உட்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 

மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிப்புக்காக மதுரை ஆவின் நிறுவனத்திலிருந்து நெய் அனுப்பியது மற்றும் வெளிச்சந்தையில் நெய், வெண்ணெய் போன்ற பொருட்கள் விற்பனை செய்தது உள்ளிட்டவற்றில் இந்த முறைகேடு நடந்துள்ளதாகவும், விசாரணை முடிந்த பின்னர் முழுமையான தகவல்கள் வெளிவரும் என்றும் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்