Skip to main content

காவல்துறை டிஎஸ்பி திடீர் மரணம்; அதிர்ச்சியில் போலீசார்

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

 Villupuram  police department shocked by sudden death of police DSP

 

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் பெண்கள், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியில் இருந்தவர் 53 வயது வெங்கடேசன். இவர் தற்போது கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள காட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

 

நேற்று காலை விழுப்புரம் அலுவலகத்திற்கு பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக கிருமாம்பாக்கம் அறுபடை வீடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு குடும்பத்தினர் கதறித் துடித்தனர். 

 

டிஎஸ்பி வெங்கடேசனின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள இரும்பேடு கிராமம். 1996 ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்து படிப்படியாக பணியில் உயர்ந்து தற்போது டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் இருந்து வந்துள்ளார். இவருக்கு எழிலரசி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி எழிலரசி கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்களின் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது அவரது நண்பர்கள் மற்றும் காவல்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்