
தன்னுடைய காதலன் 10 வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சிகள் காதலனின் செல்போனில் இருந்ததைக் கண்டறிந்த காதலி போலீசில் புகாரளிக்க, காதலன் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள பேனூர் மாதாகோவில் தெருவில் வசித்து வருபவர் அரவிந்த் (23). இவர் வாழப்பாடி அரசு மருத்துவமனையின் எதிர்புறம் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். அரவிந்த் பெரியகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்பெண் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து அவரது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இருதரப்பு பெற்றோர்களும் இவர்களது காதலை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து இவர்களுக்கு திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியாகிய 'லவ் டுடே' திரைப்பட பாணியில், காதலனும் காதலியும் ஒளிவுமறைவில்லாமல் வாழ்வதற்காக செல்போனை மாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்து இருவரும் செல்போனை மாற்றிக்கொண்டுள்ளனர். செவிலியரான அந்தப் பெண் அரவிந்த்தின் செல்போனை துருவித் துருவி ஆராய்ந்தும் சந்தேகப்படும்படியான எந்த விஷயங்களும் அவருக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும், இறுதியாக ஒருமுறை சோதித்தபொழுது அதிர்ச்சி தரும் வீடியோ காட்சி ஒன்றை அப்பெண் பார்த்துள்ளார். வாட்ஸாப் காலில் அரவிந்த் பேசும் அந்த வீடியோ காட்சியில், எதிர்முனையில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் கொஞ்சிப் பேசியதோடு, மாணவியின் உடைகளைக் களைய வைத்து பாலியல் அத்துமீறலில் தனது காதலன் ஈடுபட்டது தொடர்பான அந்தக் காட்சி காதலியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். உடனே, மாணவியின் பெற்றோரும் சம்பந்தப்பட்ட செல்போனை வாங்கிக்கொண்டு வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இது தொடர்பாக வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி விசாரணை நடத்தி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரவிந்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வாழப்பாடி டிஎஸ்பி ஹரிசங்கரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “வீடியோ கால் தானே! ரெக்கார்ட் ஆகாது. வாட்ஸாப் சேஃப் என குழந்தைகள் நினைக்கிறார்கள். சிலர் அதையே ரெக்கார்ட் பண்ணி மற்ற வாட்ஸாப் குரூப்களுக்கு அனுப்புகிறார்கள். இது ரொம்ப இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என இண்டு பேருமே இணைந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சம்பவம் உங்கள் வீட்டில் நடந்தாலும் பயப்படக்கூடாது. தைரியமாக வந்து சொல்லுங்கள். உங்கள் குழந்தைகளுடைய பெயரோ, அடையாளமோ கண்டிப்பாக வெளியே வராது. இதுபோன்ற குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகளைப் பெற்றுத் தர வேண்டும்.” என்றார்.