Skip to main content

மாமூல் பண்ணும் வேலை! கமிஷனர் வீட்டு ஏரியாவில் கனஜோராக லாட்டரி விற்பனை!

Published on 08/04/2018 | Edited on 08/04/2018

ஏழை எளிய மக்களின் வருமானத்தைச் சுரண்டி, வாழ்வைச் சீரழிக்கும் லாட்டரி கலாச்சாரத்தை ஒழிக்கும் விதமாக, அதனை முற்றிலும் தடை செய்தார் ஜெயலலிதா என, இன்றும் புகழ்பாடி வருகிறது, எடப்பாடியின் அதிமுக அரசு. 

 

இனிப்பு என்று வெள்ளைத்தாளில் எழுதி, நாக்கில் வைத்தால், அது இனித்துவிடுமா? இதுபோன்ற நிலையில்தான், தமிழகத்தில் லாட்டரி தடை உள்ளது. 

 

lottery

 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தேனாம்பேட்டை ஏரியாவில் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. ரூ.50, ரூ.100, ரூ200, ரூ.400, ரூ.500 வரை லாட்டரிச் சீட்டுகள் விற்பனை ஆகின்றன. ஒரு துண்டுச் சீட்டில் லாட்டரி சீட்டின் பெயரையும், நம்பரையும், தேதி போட்டு எழுதிக் கொடுக்கின்றனர். பரிசுத்தொகையோ, ரூ.1 லட்சத்திலிருந்து, ரூ.15 லட்சம் வரை உண்டு. 

 

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டுக்குப் பின்புறம் உள்ள தேனாம்பேட்டை போயஸ் சாலை, ஜெயாம்மாள் சாலை, முருகன் கோவில் சந்து ஆகிய பகுதிகளில்தான் லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றன. 

lottery

 

லாட்டரிக்கு தலைமையகம் கேரளாதான் என்றாலும், அம்மாநில லாட்டரி சீட்டுகள் மட்டுமின்றி, லாட்டரிக்கு பெயர் பெற்ற மாநிலங்களான மணிப்பூர், மிசோராம், அஸ்ஸாம், நாகலாந்து போன்ற மாநில லாட்டரி சீட்டுக்களும் இங்கே கனஜோராக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, இணையதளம் மூலமாகத்தான் இங்கே இந்த லாட்டரி வியாபாரம் நடக்கிறது. 
தினமும் காலையில் குறிப்பிட்ட இடத்தில் கூடும் லாட்டரி பிரியர்கள், புரோக்கர்களிடம் லாட்டரி சீட்டுகளையும், முந்தைய நாளுக்கான ரிசல்ட் பேப்பர்களையும் வாங்கி, தங்களது நம்பர் இருக்கிறதா என, பரிதவிப்புடன் முடிவுகளைப் பார்த்துவருவது காலக்கொடுமை! 

 

ஆளும் கட்சி பிரமுகரான கலையம்சம் பொருந்தியவர்தான் லாட்டரி தொழிலை நடத்துவதற்கு தொடர்ந்து உதவி வருகிறாராம்.  நாள்தோறும், பல லட்சங்கள் புழங்கும் இந்தத் தொழிலில், எந்தப் பிரச்சனையும் வராமல் இருப்பதற்கு, மாதம்தோறும் பல லட்சங்கள் கை மாறுகிறதாம். 

 

lottery

 

பசி ‘ருசி’ அறியாது என்பது பழமொழி. இந்தப் பழமொழியில் உள்ள பெயரைக் கொண்டிருக்கும் ஓட்டலை நடத்துபவர்தான், தேனாம்பேட்டை ஏரியாவில் லாட்டரி சீட்டு விற்பதற்கான லீசு எடுத்திருக்கிறார். இத்தனைக்கும், இந்த லாட்டரி வியாபாரம், சிட்டி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் வீட்டிலிருந்து சரியாக 500 மீட்டர் இடைவெளியில்தான் நடக்கிறது. இதனை கமிஷனருக்கே தெரியாமல் பார்த்துக்கொள்ளும் லோக்கல் போலீசாரின் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்வது?

சார்ந்த செய்திகள்