Skip to main content

வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

 local holiday for Vellore district on the occasion of Sri Kenkai Amman Sirasu festival

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் உள்ள ஸ்ரீ கெங்கை அம்மன் சிரசு திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவைக் காண பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடுவர். கெங்கையம்மன் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிரசு ஊர்வலம் வரும் 15.05.2023 அன்று திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏனையோர் கலந்துகொள்ள வசதியாக சிரசு ஊர்வல திருவிழா நடைபெறும் நாளான 15.05.2023 - ஆம் தேதி திங்கட்கிழமை வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

 

அதற்குப் பதிலாக 24.06.2023 அன்று சனிக்கிழமை அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், 25.06.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நடைபெறும் இடத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் கடந்த ஆண்டு 5 லட்சம் பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள். இந்த ஆண்டு அதைவிடக் கூடுதலாகப் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரசு திருவிழாவை முன்னிட்டு 1700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

 

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும்  போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் மக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளது. பழைய குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் எந்த விதமான அச்சமின்றி சிரசு திருவிழாவிற்கு வந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட காவல்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.