Skip to main content

கடல் சார் உயர் இலக்கு படை தொடக்கம்!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Launch of Marine High Target Force

இந்தியாவிலேயே முதன்முறையாக மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்தியில் உள்ள கடல் வளங்கள் மற்றும் கடல் பல்லுயிர்களைப் பாதுகாக்க இந்தியாவின் முதல் கடல்சார் உயர் இலக்கு படை இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை  தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், “இந்த கடல்சார் உயர் இலக்கு படை பவளப்பாறைகள், கடல் புல், பிற கடல் தாவரங்கள் மற்றும் கடல் உயிரினங்கள் போன்ற மதிப்புமிக்க கடல் பல்லுயிர்களின் பாதுகாப்பில் ஒரு புதிய அத்தியாயம் உருவாவதற்கான தொடக்கமாக அமையும்” என்றார்.

மேலும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  சுப்ரியா சாஹு  இந்நிகழ்வு பற்றி குறிப்பிடுகையில், “கடல் பல்லுயிர் பெருக்கத்தை பிரத்தியேகமாக கையாள்வதற்கான நீலப் படையை (Blue cadre) உருவாக்க இத்தனித்துவமான முயற்சி உதவியாக இருக்கும். கடல் மற்றும் கடலோர சூழலியலை சிறப்பான முறையில் பாதுகாக்க இந்த உயர் இலக்கு படை தமிழ்நாடு வனத்துறையின் திறனை அதிகரிக்க உறுதுணையாக அமையும்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், வனத்துறைத் தலைவருமான சுப்ரத் மொஹபத்ரா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், தலைமை வன உயிரினக் காப்பாளருமான ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வன உயிரினம்) வி. நாகநாதன் மற்றும் இராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். 

சார்ந்த செய்திகள்