Skip to main content

அக்காவையும் அவர் குழந்தையையும் எரித்து கொன்ற தங்கை...! 

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

Kallakurichi sumathi and sujatha case sujatha arrested

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 46 வயது சின்னசாமி. இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள்கள் சுமதி, சுஜாதா ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இருந்தும் கடந்த சில நாட்களாக இரண்டு பேருமே பெற்றோர் வீட்டிற்கு வந்து வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சின்னசாமியும் அவரது மனைவி செல்வியும் வயல் வேலைக்குச் சென்றுவிட்டனர்.

 

இந்த நிலையில் அவர்களது இளையமகள் சுஜாதாவும் காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சுமதி, அரிவாளால் தனது கை மற்றும் தலைப்பகுதிகளில் தனக்குத்தானே வெட்டி காயப்படுத்திக் கொண்டதோடு தன் மீதும் தனது ஒன்றரை வயது பெண்குழந்தை ஸ்ரீநிதி மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது வெளியில் சென்று திரும்பி வந்த சுஜாதா, தன் தங்கையின் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து  கத்தி கூச்சல் போட்டுள்ளார்.  

 

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து, சுமதியையும் அவரது குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சையளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு செல்லும் வழியிலேயே (நேற்று காலை) சுமதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது குழந்தை ஸ்ரீநிதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு   சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து போனது.

 

இதுகுறித்து அவரின் தந்தை சின்னசாமி, வரஞ்சரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீதர், டி.எஸ்.பி. ராமநாதன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். 

 

சுமதி அவரது குழந்தை ஆகிய இருவரது உடல் சென்னையிலிருந்து ஊருக்கு கொண்டு வந்தனர். அப்போது சுமதியின் கணவர் இளையராஜா மற்றும் அவரது உறவினர்கள் சுமதி குழந்தை இருவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும்  சுமதி  தங்கை சுஜாதா அவர்களை கொலை செய்திருக்கலாம் என்று கூறி சடலத்தினை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். 

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி. ராமநாதன், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜதாமரை, பாண்டியன் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். 

 

சுமதி, குழந்தை இருவரது உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இறந்துபோன சுமதியின் தங்கை சுஜாதாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சொத்து தகராறு காரணமாக நான் சுமதியை தலையிலும், கை கால்களில் கொடு வாளால் வெட்டினேன். பின்னர் சுமதி மீதும் அவர் குழந்தை மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து அவரையும் அவரது குழந்தையையும் கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். 

 

இதையடுத்து சுமதி அவரது குழந்தை மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டு சுஜாதாவை போலீசார் கைது செய்துள்ளனர். சுஜாதாவுக்கு மூன்று மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. அந்த கைக் குழந்தையும் சுஜாதாவுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சொத்துக்காக ஆசைப்பட்டு, உடன் பிறந்த அக்காவையே தங்கையை கொலை செய்துள்ள சம்பவம் அசகளத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்