கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 45). இவர் சங்கராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையோரம் காலணி தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது உழைப்பின் மூலம் மனைவி மற்றும் பிள்ளைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சங்கராபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு பின்புறம் ரத்தக் காயங்களுடன் துரை சடலமாகக் கிடந்துள்ளார்.
இந்நிலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துவிட்டு உடனடியாக சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தது காலணி தைக்கும் துரை என்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து துரை இறந்தது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதை அறிந்த துரையின் உறவினர்கள், துரையை யாரோ அடித்துக் கொலை செய்துள்ளனர். எனவே அவரது வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். இதனால் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பவம் குறித்து விரைந்து விசாரணை செய்து துரையின் இறப்பு தற்கொலையா, கொலையா அப்படி கொலையாக இருந்தால் உரிய விசாரணை செய்து எதற்காக கொலை செய்யப்பட்டார். அவர் உடலில் ரத்த காயங்கள் எப்படி வந்தது என்பது குறித்து விரைவில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது இறப்பு குறித்து நிச்சயம் தெரிய வரும். அதன் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதன் பேரில் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சங்கராபுரம் நகரின் மையப் பகுதியில் சாலையோரம் காலணி தைத்துப் பிழைப்பு நடத்திய துரை என்பவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.