சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதை, தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் ‘Grand Western Trunk Road’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இன்று (14.04.2021) தி.க. தலைவர் கி.வீரமணி, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவே, ‘அண்ணா சாலை’யின் பெயரும், சென்னை காமராசர் சாலையின் பெயரும் வேறு பெயர்களில் குறிக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் வந்துள்ளன எனவும் அதனைக் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அந்த அறிக்கையில், “நெடுஞ்சாலைத் துறையின் இணையதளத்தில் சென்னை அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம். நேற்று (13.4.2021) நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையில் ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவே, ‘அண்ணா சாலை’யின் பெயரும் ‘கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு’ என்றும், சென்னை காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயரும் ‘கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடு’ என்றும் குறிக்கப்பட்டிருப்பதாக நமக்கு சில தகவல்கள் வந்துள்ளன.
அதாவது ‘மவுண்ட் ரோடு’ என்பது ‘அண்ணா சாலை’ என்று மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் பெரியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அண்ணாவுக்கும், காமசராசருக்கும் செய்துள்ளனர்! விமான நிலையத்தில் அண்ணா, காமராசர் பெயர்களும் அகற்றப்பட்டு, அப்படியே நீடிக்கும் கொடுமையில் மாற்றமில்லை. விரைவில் இந்த அநியாய அக்கிரமங்களைக் கண்டித்து, மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடங்க மக்களை தமிழ்நாட்டு அதிமுக அரசு ஏனோ தூண்டுகிறது! வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்!
அரசே இப்படி போராட்டங்களைத் தூண்டலாமா? அண்ணா பெயரில் கட்சி - ஆனால், அண்ணா பெயருக்கும் ஆபத்து என்றால், இதன் ‘மூலப் புருஷர்கள்’ யார்? எந்தப் பின்னணியில் இந்த விஷமங்கள் விதைக்கப்பட்டன? தமிழ்நாட்டு மக்களே, அறைகூவல்கள் எப்படி உருக்கொள்கின்றன, பார்த்தீர்களா?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.