தஞ்சையில் இரிடியம் மோசடி தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாரியம்மன் கோவில் மன்னார்குடி புறவழிச்சாலை அருகே போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக வந்த 5 நபர்களை போலீசார் விசாரித்த பொழுது முன்னுக்கு பின்னாக பதிலளித்த நிலையில் ஐந்து பேரும் தப்பியோட முயன்றனர். பின்னர் அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் அவர்கள் கையில் வைத்திருந்த வினோத பொருள் ஒன்றை வாங்கி சோதனையிட்டனர். பின்னர் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து அந்த 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், முனீஸ்வரன், முனீஸ்வரன் (மற்றொரு), தேனியைச் சேர்ந்த சின்னமுத்து, கண்ணன் என்பது தெரியவந்தது. இவர்கள் வைத்திருந்த அந்த வினோத பொருள் பித்தளை பாத்திரம் பானை வடிவிலிருந்தது. அது குறித்து போலீசார் விசாரிக்கையில் அதை இரிடியம் எனக்கூறி 50 லட்சம் ரூபாய்க்கும் விற்க முயன்றதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.