Skip to main content

பிரதமர் உரைக்கு உயிர் கொடுத்த மாணவன்... உயிரை பறித்த தண்ணீர்... கதறி அழும் கிராமம்!

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் கிராமத்தில் வசிக்கும் மேரி அந்தோணிசாமி மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 14) மங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

பாரதப் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை பள்ளியிலும் தான் வசிக்கும் தெருவிலும் மட்டுமின்றி அவன் செல்லும் இடமெங்கும் செயல்படுத்தினான். அவன் செல்லும் வழியில் ஒரு குப்பை கிடந்தாலும் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு செல்லும் மாணவன் சக நண்பர்களிடம் வானொலியில பிரதமர் பேசினதை கேட்டேன் நாம வசிக்கும் இடத்தை நாம தூய்மையா வச்சுகிட்டா நம்மை சுற்றி குப்பைகள் வராதுனு பேசினார். நம்ம எல்லாரும் சேர்ந்து செஞ்சா ஊரையே சுத்தமா வச்சுக்கலாம் என்று பேசுவான். அவனது பொழுது போக்கு வானொலி கேட்பதாக இருந்தது.

 

incident in pudukottai.... school student


இப்படி தூய்மை இந்தியாவின் ஒரு சிறந்த மாணவனாக இருந்தவன்.. இன்று மங்கனூர் பெரியகுளத்தில் சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, குளத்தில் மழைத்தண்ணீர் முழுமையாக நிரம்பி இருப்பதால் நீண்ட நாட்களாக மழையையும் தண்ணீர் நிரம்பிய குளத்தையும் பார்த்திராத மகிழ்ச்சியில் குளத்தின் மையத்திற்கு சென்றவனால் திரும்பி கரைக்கு வரமுடியவில்லை மூச்சுத்திணறல் ஏற்பட்டு , சகதியில் சிக்கினார்.  சக நண்பர்களும் அவனை மீட்க போராடியுள்ளனர் முடியவில்லை.

அதன் பிறகு  நீச்சல் தெரிந்த கிராம மக்கள் நீரில் சிக்கிய மாணவரை தண்ணீரிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.நிலை தடுமாறி விழுந்த மாணவரை மீண்டும் உயிர்ப்பிக்க அங்கிருந்தவர்கள் வயிற்றில் இருந்து நீரை அகற்றி முதலுதவி செய்தும் பயனில்லை. உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவரின் தந்தை எந்த கெட்ட பழக்கும் இல்லை என்றாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். குடும்ப சூழ்நிலையால் தாய் ஒருவரால் குடும்பத்தை ஓட்ட முடியாது என்பதால் அண்ணன் ஆரோக்கியராஜ் ப்ளஸ் 2 முடித்த கையோடு ஜவுளிக்கடைக்கு வேலைக்கு போய்விட்டார். தம்பி நல்லா படிக்கிறான் அவனை படிக்க வைப்போம் என்று அண்ணன் படிப்பை துறந்தார். இந்த நிலையில்தான் இந்த மாணவரின் இறப்பு, அவரது குடும்பத்தை மட்டுமின்றி அந்த தெருவையே நிலை தடுமாற வைத்துள்ளது.

இது குறித்து அவரது பள்ளித் தலைமையாசிரியர் காவேரியம்மாள் கூறியதாவது,

பள்ளி வளாகத்தை தூய்மையாக வைப்பதிலும்,பள்ளியில் சக மாணவர்களுக்கு உதவுவதிலும் முன்னோடியாகவும்  நல்ல ஒழுக்கமுள்ள மாணவனாகவும் இருந்தான்.தனிப்பட்ட முறையில் அனைத்து ஆளுமைகளும் உள்ள ஒரு சிறந்த நிர்வாகியாக வர வேண்டியவன் இப்படி இறந்து விட்டான் என்ற செய்தி எனக்கு பேரிடியாக உள்ளது என்கிறார்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாமுண்டி கூறியதாவது, பொது நலம் மிக்க இந்த மாணவர் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை திறம்பட செய்ததுடன் மற்றவர்களையும் கடைப்பிடிக்க தூண்டுகோலாக இருந்தார். அப்படியான மகனை இழந்து தவிக்கும்  குடும்பத்திற்கு உடனடியாக மத்திய மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும் என்றார்.

அதேபோல அந்த மாணவன் வசித்த தெருவைச் சேர்ந்த ஜெய்சங்கர்.. வயதில் சிறுவனாகாஇருந்தாலும் அறிவும் ஆற்றலும் அதிகம். எப்எம் ரோடியோ கேட்பான். அப்படி ஒரு நாள் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா உரையை கேட்டவன் அடுத்த நாள் பள்ளிக்கு செல்லும் போதே தெருவில் கிடந்த தகுப்பைகளை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு சென்றான். புதர்களாக இருந்தால் புல்லை அகற்றுவான். பள்ளியிலும் அப்படித் தான். அவன் செல்லும் இடங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பான். அடுத்தவர்களையும் அதை செய்ய வலியுறுத்தி எங்கள் கிராமத்திற்கு தூய்மையின் வழிகாட்டியாகாயிருந்த சிறுவனை இப்படி பலி கொடுத்துவிட்டோம். சில மாதங்களில் இரு உயிர்களை பறிகொடுத்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு மத்திய அரசு உதவி கிடைத்தால் நல்லது என்றார்.

தூய்மையை வலியுத்தி புரட்சியை செய்த ஸ்டீபன்ராஜ் பிரேதப் பரிசோதனைக்காக  பிணவறையில் அமைதியாக கிடக்கிறான். அரசுகள் முடிவெடுக்கட்டும் அந்த புரட்சிக்காரன் குடும்பம் வாழ...

 

 

 

சார்ந்த செய்திகள்