Skip to main content

‘கார் மோதி விபத்து; 3 பெண்கள் உயிரிழப்பு’ - முதல்வர் இரங்கல்!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
incident of Mukhani village is located near Eral in Thoothukudi district

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே அமைந்துள்ளது முக்காணி கிராமம். இக்கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் முக்காணி கிராமம் உள்ளது. இங்கு தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் ஓரமாக இன்று (23.06.2024) காலை 6.30 மணியளவில் நின்று தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். இவர்கள் மீது தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.  இந்த விபத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த முக்காணி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் சாந்தி (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அமராவதி (வயது 58) மற்றும் பார்வதி (வயது 35) ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகதாய் (வயது 55) சுந்தரம் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்