Skip to main content

கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை சம்பவம்.... மேலும் ஒரு நபருக்கும் தொடர்பு... டி.என்.ஏ ஆய்வில் அதிர்ச்சி! 

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 1ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் 25ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார். அடுத்த நாளான 26ஆம் தேதி வீட்டின் எதிரே உள்ள வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கோவையில் பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.

 

kovai


பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியின் வீட்டிற்கு எதிரே மனைவியை பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை 31ஆம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி அரசுத்தரப்பு வாதம் நிறைவடைந்த, எதிர்த்தரப்பு இறுதி வாதத்திற்கு இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது. 

 

 

kovai


இதற்கிடையே, 18ஆம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி வாதம் நடந்தது. இருத்தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு 27ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி ராதிகா  அறிவித்தார். வழக்கின் விசாரணை அடுத்து, கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.விசாரணைக்கு பிறகு  27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

kovai


இந்நிலையில் கொல்லப்பட்ட சிறுமியின் உடலில் சிறுமியின் இறப்பிற்கு காரணமான மற்றொரு நபருடைய விந்தணுவானது டி.என்.ஏ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மேற்படி சிறுமியின் இறப்பிற்கு காரணமான மற்றொரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க கூடுதல் புலன் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வலியுறுத்தி சிறுமியின் தாயார் சார்பில் இன்று(26.12.2019) கோயம்புத்தூர், மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.