திருச்சி என்.ஐ.டி மாணவிகள் விடுதியில் மாணவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர்களில் ஒருவரான கதிரேசன் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட, அங்கிருந்த மற்ற மாணவர்கள் கதிரேசனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, மகேஸ்வரி என்பவர் பெண்கள் அறைகுறையாக ஆடை அணிந்தால், இதுபோன்றுதான் நடக்கும் என்று மாணவிகளிடம் அநாகரிகமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து என்.ஐ.டியில் படிக்கும் அனைவரையும் வாட்ஸ் ஆப் செயலின் மூலம் ஒன்று திரட்டிய மாணவர்கள் அலட்சியமாக நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து என்.ஐ.டி வளாகத்தில் இரவும் முதல் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். 5 ஆண் ஊழியர்கள் மாணவர்களின் அறைக்கு இணையதள சேவை அளிக்க வரும் போது விடுதி காப்பாளர்கள் உடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், மாணவிகளின் அறைக்குத் தனியாக ஆண் ஊழியர்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். அதன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதனால், விடுதி காப்பாளர்கள் மூன்று பேரும் சம்பந்தப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி என்.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாணவர்களின் பிரச்சனை குறித்துக் கேட்டறிந்தார். பின்பு கல்லூரி நிர்வாகம் மற்றும் விடுதி காப்பாளர்களிடம் விசாரணை செய்தார். அதன் பின் மாணவர்கள் முன்னிலையில் தலைமை விடுதி காப்பாளர் பேபி நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.
இதனிடையே மாணவர்கள் மத்தியில் பேசிய வருண்குமார், ஏதேனும் பிரச்சனை இருந்தால், உடனடியாக தெரியப்படுத்துங்கள் என்று தன்னுடைய தொலைப்பேசி எண்ணையும் அந்த பகுதி காவல் ஆய்வாளரின் எண்ணையும் கொடுத்துள்ளார். மேலும் என்.ஐ.டியில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். காவல்துறையின் உடனடி நடவடிக்கைக்கு பெற்றோர்களும், மாணவர்களும் நன்றி தெரிவித்தனர்.