ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது கெம்பநாயக்கன்பாளையம். வனப்பகுதியை ஒட்டியுள்ள இக்கிராமத்தில் பெரும்பள்ளம் ஓடை என்ற ஒரு ஏரி உள்ளது. நீர்த்தேக்கம் உள்ள இந்த ஏரியை ஒட்டியுள்ள நிலங்களில் அப்பகுதியை சேர்ந்த சிலர் விவசாயம் செய்து வந்தனர். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தில் சோளப் பயிர் என்ற பெயரில் சோளப் பயிருக்கு நடுவே கஞ்சா பயிரிட்டு அதை அறுவடை செய்து விற்பனை செய்து சிலர் வருவது காவல்துறைக்கு தகவல் வந்ததையடுத்து திடீரென சோதனையில் இறங்கினார்கள்.
அப்போது கெம்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி வேடச்சி ஆகியோர் இரண்டு ஏக்கரில் சோளப்பயிர் பயிரிட்டு அதற்கு நடுவில் கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்தனர். இதனடிப்படையில் கஞ்சா பயிர்களை போலீஸார் அழித்ததோடு, ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு இந்த கஞ்சா பயிர் பயிரிட கொடுத்தது புட்ரி என்ற ஒரு பெண். அவரை தேடி வருவதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால் உள்ளூரில் உள்ள செல்வந்தர்கள் அரசியல் பிரமுகர்கள் துணையோடுதான் இந்த கஞ்சா பயிரிட்டு வந்தது என்றும் இப்போது கைது செய்யபட்டவர்கள் அதில் வேலை செய்தவர்கள்தான் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.