Skip to main content

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு! மாணவியின் தந்தையிடம் மீண்டும் விசாரணை!  

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

IIT student Fatima case. Student's father re-investigated!

 

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்துவந்த மாணவி பாத்திமா லத்தீப், கடந்த 2019 நவம்பர் மாதம் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்தது சென்னை பெருநகர காவல்துறை. 

 

சென்னையின் அப்போதைய போலீஸ் கமிஷ்னர் திரிபாதியை சந்தித்த மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், “எனது மகளின் இறப்பு தற்கொலை போல தெரியவில்லை. அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன, மகளின் இறப்புக்கு நீதி வேண்டும்” என்று புகார் கொடுத்திருந்தார். 

 

இந்த நிலையில், பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அரசியல் கட்சிகளும் பாத்திமாவுக்காக நீதி கேட்டனர். ஐ.ஐ.டி. நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகமும் அதன் வளாகமும் மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன என்று ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகளைக் கூறியபடி போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருந்தன மாணவ அமைப்புகள். 

 

இதற்கிடையே, பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இதனையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது அப்போதைய தமிழ்நாடு அரசு. சி.பி.ஐ.யும் வழக்கை ஏற்றுக்கொண்டது. வழக்கு தொடர்பான அனைத்தையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர் தமிழ்நாடு காவல்துறையினர். 

 

மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அவரது தோழிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவியின் மரணத்தில் தொடர்புடையவராக ஒரு பேராசிரியர் இருக்கிறார் என்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட பேராசிரியரிடமும் ஐ.ஐ.டி. நிர்வாகத்திடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதாக வெளிப்படையான தகவல்கள் வராத நிலையில், இந்த வழக்கு கடந்த 2 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. 

 

இந்நிலையில், வழக்கை மீண்டும் கையிலெடுத்திருக்கிறது சி.பி.ஐ. மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்பிடம் மீண்டும் விசாரிக்க, அவரை தங்களின் அலுவலகத்துக்கு அழைத்துள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இதனைத் தொடர்ந்து, இன்று (07.12.2021) காலை 10.30 மணிக்கு சென்னை பெசண்ட் நகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகவிருக்கிறார். இந்த வழக்கில் சி.பி.ஐ. சேகரித்துள்ள சில ஆதாரங்களின் அடிப்படையில் அப்துல் லத்தீப்பிடம் தெளிவுப்படுத்திக்கொள்ள அவரை சி.பி.ஐ. வரவழைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்