23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கம் வென்று இந்தியாவிற்கு வரலாறு சாதனை படைத்துள்ளார். அவரது சாதனைக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுமழை குவிந்து வருகிறது.
நேற்று தாயகம் திரும்பிய கோமதி மாரிமுத்துவுக்கு உற்சாக வரவவெற்பளிக்கப்பட்டது. சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேர்ல்டு சாம்பியன்ஷீப்புக்கு தகுதியாகியுள்ளேன். ஒலிம்பிக்கில் விளையாண்டு தங்கம் வெல்ல முயற்சிப்பேன். தமிழக அரசு எனக்கு சப்போர்ட் செய்தால் நான் கண்டிப்பா ஒலிம்பிக்கில் மெடல் வாங்குவேன் எனக்கூறினார்.
அதேபோல் மதியம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோமதி மாரிமுத்து, நான் விளையாட வேண்டும் என விரும்பிய எனது தந்தை என்னை பயிற்சிக்கு தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். எனக்கு உணவு வேண்டும் என்பதற்காக மாட்டிற்கு வைத்த உணவை அவர் சாப்பிட்டார் என்பதை என்னால் மறக்க முடியாது,எனது தந்தை இருந்திருந்தால் கண்டிப்பாக மகிழ்திருப்பார் என கண்ணீருடன் நெகிழ்ச்சியாக வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கிழிந்த காலணியுடன் தான் ஆசியதடகள போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றேன். வறுமை காரணமாக பயிற்சியை நிறுத்திவிடலாம் என பலநேரங்களில் எண்ணியயுள்ளேன். ஒலிம்பிக் போட்டிதான் அடுத்த இலக்கு. வெளிநாட்டில் பயிற்சி பெற அரசு உதவ வேண்டும் எனக்கூறினார்.