Skip to main content

''திரில் அனுபவத்திற்காக செய்தேன்...'' முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி வாக்குமூலம்!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

' I did it for the thrill experience ... '' Confession of the worker who made the threat to the Chief Minister's house!

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மில் தொழிலாளியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் அவசர எண்ணான 100க்கு புதன்கிழமை (பிப். 10) மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு பேச்சை துண்டித்துவிட்டார்.

 

இதுகுறித்து சேலம் மாவட்ட காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக பூலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் முதல்வரின் வீட்டில் பாதுகாப்பை பலப்படுத்தினர். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மூலம் சோதனை நடத்தப்பட்டது. இதில், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சிசிடிவி கேமரா பதிவுகளில், மர்ம நபர்கள் உள்ளே வந்து சென்றதற்கான அறிகுறிகளும் இல்லை.

 

விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து செல்போன் எண் மூலம் பேசியிருப்பது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த அன்பு என்கிற அன்பழகன் (47) என்பது தெரிய வந்தது. பல்லடத்தில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு மில்லில் வேலை செய்து வருவதும் தெரிந்தது.

 

தனக்கு ‘திரில்’ அனுபவம் வேண்டும் என்பதற்காக, தன் நண்பனின் செல்ஃபோனில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்