Skip to main content

“ஒரு ஞாயிற்றுக்கிழமை நானே நீதிமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்த உள்ளேன்” - நீதிபதி சஞ்சீப் பானர்ஜி!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

"I am going to clean the court premises myself on a Sunday" - Judge Sanjeeb Banerjee

 

நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இருப்பதாக தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தைத் தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

மனுதாரர் தரப்பில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மருத்துவமனையை உபயோகப்படுத்த முடியவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டடங்கள் இன்னும் மாற்றப்படாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நீதிமன்ற வளாகத்தைத் தூய்மையாகவும் பசுமையாக மாற்றி பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், 19 துப்புரவுப் பணியாளர்கள் வளாகம் முழுவதும் தூய்மை பணியை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டது. 

 

இதனை ஏற்ற தலைமை நீதிபதி, நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் துய்மைப்படுத்தப்படாமல் இருப்பதைக் கவனித்தாகவும், எனவே  ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று தானே நேரடியாக ஒரு வாளி மற்றும் துப்புரவு உபகரணங்களுடன் நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் பணிக்கு தன்னுடன் அனைத்து வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களும் சேர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்