Skip to main content

"இந்தி தெரியாமல் சிவில் தேர்வில் பாஸ் செய்தும்.." - அண்ணாமலை

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

Hindi Language; "Tamil Nadu is in Category C" - Annamalai

 

அமெரிக்கா சென்றிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின் அவர் செய்தியாளைகளை சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “திமுக இந்தியை திணிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தான் ஆட்சிக்கு வந்தார்கள். அதனைத் தொடர்ந்து பல்வேறு காலக்கட்டங்களில் இந்தியை திணிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியோடு தான் கூட்டணியும் வைத்தார்கள். புதிய கல்விக்கொள்கை அறிக்கையில் இந்தி கட்டாயக் பயிற்று மொழியாக இருக்கும் என்பதை மாற்றி மூன்றாவது மொழியாக நீங்கள் எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதை கொண்டுவந்தார். அது தான் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான கருத்து. இதில் அலுவலக மொழிக்கு ஒரு கமிட்டி இருக்கிறது.

 

இதற்கு முன்பு ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த பொழுது அந்த கமிட்டியின் தலைவராக இருந்தார். இப்பொழுது அமித்ஷா அந்த கமிட்டியின் தலைவராக இருக்கிறார். அந்த கமிட்டி கொடுத்த அறிக்கையில் இந்தியாவை பொறுத்தவரை கேட்டகிரி ஏ, பி, சி என மூன்று அமைப்புகளாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்தி மொழியை முழுமையாக பயன்படுத்தும் மாநிலங்கள் கேட்டகிரி ஏ. பாதிப்பயன்படுத்தும் மாநிலங்கள் கேட்டகிரி பி, பயன்படுத்தாத மாநிலங்கள் கேட்டகிரி சி. அதன் அடிப்படையில் தமிழகம் கேட்டகிரி சி மாநிலம். 

 

இந்த கமிட்டியின் அறிக்கை கேட்டகிரி எ மாநிலத்தை பொறுத்தவரை அவர்களுடைய பயிற்று மொழி இந்திக்கு மாற வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். இதை தான் புதிய கல்விக்கொள்கையிலும் சொல்லி இருக்கிறோம். ஆறாம் வகுப்பு வரை உங்களுடைய தாய் மொழிதான் பயிற்று மொழியாக இருக்கும். அதன்படி புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் ஆறாம் வகுப்பு வரை பயிற்று மொழியாக தமிழ் மட்டுமே இருக்கும். ஹிரியனா, உத்திரபிரதேசத்தை பொறுத்தவரை இந்தியாக இருக்கும். கேட்டகிரி ஏ மாநிலங்கள் செய்ய வேண்டியதை ஒரு அறிக்கையாக கொடுத்திருப்பதாக அறிகின்றேன். 

 

அதே சமயத்தில் திமுக இளைஞரணி திமுகவின் மாணவரணி 15ம் தேதி போராட்டத்திற்கு அறிவித்திருப்பதாக கூட நான் அறிகிறேன். அந்த போராட்டத்திற்காக ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். அதாவது, மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாளில் இந்தி என்பதை மட்டும் கட்டாய மொழியாக மத்திய அரசு வைக்கிறது. இதை எதிர்த்து நாங்கள் போராட்டம் செய்ய போகிறோம் என்று. 

 

திமுக மாணவரணி சொல்லக் கூடிய ஐஐஎமில் படித்திருக்கிறேன். இந்தி ஒரு வார்த்தை தெரியாமல் ஆங்கிலத்தில் லக்னோவில் படித்துவிட்டு உங்கள் முன் பேசிக்கொண்டு இருக்கிறேன். அதேபோல் சிவில் சர்வீஸ் தேர்வினை பற்றியும் திமுகவின் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். ஒரு வார்த்தை இந்தி தெரியாமல் சிவில் தேர்வில் பாஸ் செய்து இன்னொரு மாநிலத்தில் பணி செய்யும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

 

ஆனால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அட்டவணை 8ல் இருக்கும் மொழிகள் தான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகள். இந்தியாவில் நடத்தகூடிய எந்த தேர்வாக இருந்தாலும் கூட எட்டாம் அட்டவணையில் இருக்கக் கூடிய மொழிகளில் மட்டும் தான் நடத்த வேண்டும். அதிலே, நம் தமிழும் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எந்த கமிட்டியும் வித்தியாசமான அறிக்கையை கொடுக்கவில்லை. அதனால் இல்லாத ஒரு பொய்யை கிளப்பி ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு இருக்கக் கூடிய அபிப்பிராயம் கோபம் இதை எல்லாம் மறைப்பதற்கு திமுக கபட நாடகம் ஆடுகிறது” எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்