Skip to main content

சமஸ்கிருதம் பெற்றெடுத்த பிள்ளைதான் இந்தி! அதனால்தான் இயல்பாகவே தமிழர்களின் ரத்தம் கொதிக்கிறது- கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் பேச்சு!!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ்நாடு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ‘மும்மொழித் திட்டமும் ஒற்றைக் கலாச்சார முயற்சியும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் கலந்த கொண்டு பேசினார். 

 

காஷ்மீரில் இருந்து நாகர்கோவில் வரை நாகர் இனத்தவர்கள் வாழ்த்துள்ளனர். நாகர்கள்தான் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். அரசுரர்கள் வேறு யாரும் அல்ல. அவர்கள் திராவிடர்களே! எனவே, ஆரியர் வருகைக்கு முன்பாக இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழியாக தமிழ்மொழி இருந்துள்ளது என்பதற்கான ஆதாரத்தை அண்ணல் அம்பேத்கர் நிறுவியுள்ளார்.

 

 Hindi is a child born to Sanskrit!That's why the blood of Tamils ​​is naturally boiling !- Poet Rasi Panneerselvam Speech !!



செவ்வியல் மொழிகளில் ஒன்றாகிய சமஸ்கிருதம் யாகம் நடத்தி அழிக்க வேண்டும் என்கிறது. தமிழ்மொழியோ நேருக்கு நேராக போர்புரிந்து வெல்ல வேண்டும் என்றது. ஆரியர்களின் சூழ்ச்சியால் வடஇந்தியாவில் சமஸ்கிருதம் ஆதிக்கம் பெற்றது. சமஸ்கிருதம் பெற்றெடுத்த பிள்ளைதான் இந்தி. அதனால்தான் இந்தி திணிப்பு என்றதும் இயல்பாகவே தமிழர்களின் ரத்தம் கொதிக்கிறது.

 

 

இந்தி மொழியின் வயது அதிகபட்சம் நானூறு வருடம்தான். செவ்வியல் மொழிகளில் இன்றும் உயிரோடு இருப்பது சீனமும், தமிழும்தான். கடந்த 2004-ல் தமிழை சொம்மொழியாக மத்திய அரசு அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து தமிழில் இருந்து பிரிந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளும் செம்மொழிக்கான தகுதியைப் பெற்றது. ஆனால், வட மாநிலங்களில் உள்ள எந்தவொரு மொழியும் செம்மொழிக்கான தகுதியைப் பெறவில்லை.

 


9 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேசத்தில 32 கோடி பேர் மட்டுமே இந்தி மொழியை பேசுகின்றனர். 125 கோடியில் 32 கோடி பேர் மட்டுமே பேசும் மொழியை எப்படி தேசிய மொழியாக ஏற்க முடியும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்தி அலுவல் மொழிதானே தவிர. ஆட்சி மொழி அல்ல. 1965-ல் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்தியின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றியது. இந்தியாவை முழுவதையும் இணைத்திருப்பது ஆங்கிலமும், ரயில்  தண்டவாளங்களும்தான்.

 



தற்பொழுது மும்மொழித் திட்டம் என்ற போர்வையில் மீண்டும் இந்தியைத் திணிக்க தீவிர முயற்சி நடக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக வேறு எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இந்தி ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் மறைமுகமாக நீங்கள் இந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மிரட்டுகின்றனர். அதே நேரத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இவர்கள் அறிவித்திருப்பது சமஸ்கிருதத்தை. 

 

இவர்களின் நரித்தனம் புரிகிறதா? நேரடியாக சமஸ்கிருதத்தை புகுத்த முடியாத மாநிலங்களில் இந்தியின் மூலம் சமஸ்கிருதத்தைப் புகுத்தப் பார்க்கின்றனர். இதன் மூலம் சமூகநீதிக்கு எதிரான சனாதன ஆட்சியை நிறுவுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். 



தமிழக அமைச்சர் ஒருவர் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுவிட்டோம் எனக் கூறுகிறார். கட்சிப் பெயரில் திராவிடத்தை வைத்திருக்கும் ஒரு கட்சியின் ஆட்சி இந்த லட்சணத்திற்கு வந்துவிட்டது. அடிப்படையில் இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. அது பலவேறு ஒன்றியங்களின் கூட்டமைப்பு. அதனால்தான் இந்தியாவை துணைக் கண்டம் என்கிறோம். உலகில் உள்ள அனைத்து தப்பவெட்ப நிலைகளும், அனைத்து விதமான வளங்களும் இந்தியாவில் இருக்கிறது. 600-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத் தன்மைதான் இந்தியாவில் சிறப்பு. இதை சிதைக்கப் பார்க்கிறார்கள். 

 


தற்பொழுது அறிவித்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கை சிறுபாண்மையினரின் கல்வி உரிமையை ஒழித்துக் கட்டுகிறது. பெரு மதவாதத்தை முன்னிறுத்துகிறது. இந்து தேசியம் என்ற போர்வையில் இந்து பாசிசம் தனது கோர முகத்தை காட்ட முயற்சிக்கிறது. இதற்கு தமிழக மக்கள் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள். அது இந்திய முழுமைக்கும் இந்தி திணிப்புக்கு எதிரான பதிலடியாக இருக்கும் என்றார்.

 


கருத்தரங்கிற்கு ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் உமாபதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சு.மதியகழன் வாழ்த்துரை வழங்கினார். ரோஸ்னி அப்துல்லா கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியை  மாவட்டத் தலைவர் எம்.ஸ்டாலின் தொகுத்து வழங்கினர். முன்னதாக கிளைப் பொருளாளர் வரவேற்க, காசிராஜா நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்