
சேலத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகப் பதிவிட்ட டுடோரியல் கல்லூரி ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகக் கூறி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் உண்மை என்ன? என்று தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
அதில், “இது திரிக்கப்பட்ட செய்தி. கலியுக கண்ணன் எனும் எக்ஸ் சமூக வலைத் தள கணக்கில் இயங்கிவரும் சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த இந்நபர் தொடர்ந்து சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வெறுப்புப் பதிவுகளைப் பதிவிட்டதாலும், பெண்களுக்கு எதிராக இழிவான பதிவுகளைப் பதிவிட்டதாலே வழக்குப் பதிவாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகப் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டதாகப் பொய்யான செய்திகள் பரப்பப்படுகிறது. அதாவது மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகப் பேசியதற்குக் கைது செய்யப்படவில்லை. ஆபாசப் பேச்சிற்கே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே வதந்தியைப் பரப்பாதீர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.