Skip to main content

உத்தரவுகளை மீறுபவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை! -அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

High Court order for government officials

 

கரோனா தொற்றைத் தடுக்க அரசும்,  காவல்துறையும் பிறப்பிக்கும் உத்தரவுகளை சமூக பொறுப்புணர்ந்து  செயல்படுத்த வேண்டுமென பொது மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றம்,  அவற்றை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு அதிகாரிகளுக்கு   உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் மாநில அரசின் 144 தடை உத்தரவு போன்ற நடவடிக்கைகள்,  மார்ச் மாத இறுதியில் தொடங்கப்பட்ட போது, பால், மருந்து, மளிகை போன்றவற்றை விற்கவும், விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் சமூக விலகல் அறிவுறுத்தலால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்களிடம் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஊரடங்கு காரணமாக தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிக்கின்றனர். காவல்துறையினர் சாலையில் செல்பவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்கின்றனர் என்றும், சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்களைக் கைது செய்யலாமே தவிர,  அவர்களைத் தண்டிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை.  ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ள சூழலில், காவல்துறை தாக்கும்போது மக்களும் சில இடங்களில் திருப்பி தாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு,  நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக தமிழக டிஜிபி மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும்,  கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து,  அரசு மற்றும் காவல்துறை உத்தரவுகளை மீறியதாக 4 லட்சத்து 32 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் மக்கள் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 3 லட்சத்து 79 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன பறிமுதல் தவிர 5 கோடி ரூபாய் அளவிற்கு  அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

இவற்றைப் பதிவு செய்த நீதிபதிகள், கரோனா தாக்கத்தை உணர்ந்து அரசு மற்றும் காவல்துறை உத்தரவுகளை உணர்ந்து  பொதுமக்கள் சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் அரசு மற்றும் காவல்துறை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது,  அரசு அதிகாரிகள் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 

 

சார்ந்த செய்திகள்