Skip to main content

“வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்..” - உயர்நீதிமன்ற நீதிபதிகள்

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

High Court Judges says, there is chances to  ban vote counting

 

கரோனா கட்டுப்படுத்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என காட்டம் தெரிவித்த நீதிபதிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

 

தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. 

 

இந்நிலையில், 77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அந்த மனுவில், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது, கரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும்போது, தனிமனித விலகல் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “4,900 சதுர அடி மற்றும் 3,400 சதுர அடிகளில் இரண்டு அறைகள் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் தவிர மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் ஏஜெண்டுகளை அனுப்பப் போவதில்லை” என்றும் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கைக்காக ஆறு கூடுதல் மேஜைகள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம்தான் காரணம் என கண்டனம் தெரிவித்தனர். மேலும்  வாக்கு எண்ணிக்கையின்போது தடுப்பு விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டும் அதை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்ததாகவும், கரோனா கட்டுப்படுத்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

 

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமிநாசினி தெளித்தல், தனிமனித இடைவெளி பின்பற்றுதல், முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி வாக்கு எண்ணும் மையங்களில் இந்த நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும், இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதார இயக்குனர் ஆகியோருடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

 

அன்றைய தினம் இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்