Skip to main content

“உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது..” - உயர் நீதிமன்றம்

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

High court comment on Vijay RR car issue

 

நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி வசூலிக்கத் தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

பிரபல தமிழ் நடிகர் விஜய், கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. இதையடுத்து, ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். 

 

இந்த உத்தரவை எதிர்த்தும் வரி விதிக்க தடை கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் காரை பதிவு செய்யாததால் அதனைப் பயன்படுத்த முடியவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், “மனுதாரர் தான் எந்த தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை. மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோதுதான் மனுதாரர், நடிகர் என்று குறிப்பிட்டார். புகழ்பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனவும் குறிப்பிட்ட நீதிபதி, வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்புதானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை” என காட்டமாக தெரிவித்துள்ளார். 

 

மேலும், “மக்கள் செலுத்தக்கூடிய வரிதான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது” என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். சமூகநீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரிஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், வரிஏய்ப்பு என்பது தேசத்துரோகம் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டார்.

 

மேலும், நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்