Skip to main content

முன்ஜாமீன் கேட்டு நக்கீரன் ஊழியர்கள் மனுத்தாக்கல் - நவ.12க்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவு

Published on 30/10/2018 | Edited on 30/10/2018



 

chennai high court



சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியரை ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு போலீஸார் கடந்த 09.10.2018 செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பின்னர் எழும்பூர் கோர்ட், இந்த வழக்கில் நக்கீரன் ஆசிரியரை கைது செய்வதற்கு போதிய ஆவணங்களும், ஆதாரங்களும் சமர்பிக்கப்படவில்லை என்றும், இந்திய தண்டனைச் சட்டம் 124 இதற்கு பொருந்தாது என்றும் நக்கீரன் ஆசிரியரை கைது செய்ய மறுத்து உத்தரவிட்டது அனைவரும் அறிந்ததே.  

 

அந்த வழக்கில் ஆசிரியருடன் சேர்க்கப்பட்டிருந்த நக்கீரன் ஊழியர்கள் 34 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  

 

அந்த வழக்கு 12.10.2018 அன்று நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக நீண்ட விவரமான பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது என்றும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வந்து வாதிட வேண்டியிருப்பதாலும் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

 

இந்த வழக்கில் நக்கீரன் ஊழியர்கள் 34 பேர் மீதும் எந்த மேல்நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டோம் என்று அரசு தரப்பில் உத்திரவாதம் அளித்ததையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஊழியர்கள் 34 பேரையும் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று உத்தரவாதம் அளிப்பதாகவும், வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுகிறது என்றும் வாதிடப்பட்டது. 
 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை நவம்பர் 12க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 
 

 

 


 

 

 

 



 

சார்ந்த செய்திகள்