Skip to main content

ஹெலி கேம் பார்வையில் 'ஈரோடு'- போலீசார் அதிரடி 

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

தமிழக அளவில் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு அதிகமுள்ள ஈரோடு மாவட்டத்தில், கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பாதிப்புக்குள்ளானவர்கள் வசித்து வந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் ஹெலிகாம் வைத்து கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

 Heli cam viewing 'Erode' - Police Action


ஈரோட்டிலிருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள், இங்கு வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என ஈரோட்டில் 22 நபர்களும், 10 மாத குழந்தை உள்பட 4 நபர்களும் உள்ளனர். இதன் மூலம் கரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆக உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் சென்று வந்த மசூதி, வீதிகள், மருத்துவமனை பகுதிகள், நடமாடிய வீதிப் பகுதிகள் என அவர்கள் சென்றதாகக் கண்டறியப்பட்ட வீதிகள் முழுமையும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புக்கு காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிகளிலுள்ள வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை, மஜீத் வீதி, கொங்கலம்மன் கோவில் வீதி, ரயில்வேகாலனி, சாஸ்திரி நகர், லெனின் வீதி, கருங்கல்பாளையம், பிராமண பெரிய அக்ரஹாரம் என நகரின் முக்கிய வீதிப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

 Heli cam viewing 'Erode' - Police Action


தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்போருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் குடியிருப்புப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 60ஆயிரம்  நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தடை உத்தரவு காலம் முடிவடையும் வரை, வீடுகளை விட்டு வெளியேற கட்டாய தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படி தனிமைப்படுத்தப்பட்ட வீதிகள், வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்திற்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ந்து கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் வசிப்போர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறுவதை கண்காணித்திடும் வகையில் போலீசார் மூலம் ஹெலிகாம் கேமரா வைத்து அந்த நவீன வகை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 

அதன் மூலம் வீடுகளை விட்டு வெளியேறுபவர்கள் மீண்டும் வீடுகளுக்குள் செல்லுமாறு காவல்துறையினர் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மாநகரப் பகுதிகளிலும் ஹெலிகாம் நவீன வகை கேமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டத்தை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது. தடை உத்தரவு காலம் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் கடினமாக மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்