தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (27.09.2024) டெல்லியில் சந்தித்துப்பேசினார். அப்போது அவர், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்திடத் தேவையான மத்திய அரசின் நிதியை வழங்க வேண்டும். சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியையும், தமிழ்நாடு இல்லத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜாவையும் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
அப்போது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு முதலமைச்சர் மு.க. பதிலளித்தார். அதன்படி செய்தியாளர், ‘உங்கள் அமெரிக்க பயணத்திற்கு டெல்லி தமிழ் பத்திரிகையாளர்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கட்டப்பட்டு வரும் புதிய தமிழ்நாடு இல்லத்தில் கலைஞர் நினைவாக எங்களுக்கு ஒரு புதிய அறை ஒதுக்கித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’ எனக் கோரிக்கை வைத்தார். அதற்கு முதலமைச்சர், ‘நன்றி, உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் ஒருவர், ‘கடந்தமுறை பிரதமரை சந்தித்த போது அவரது அணுகுமுறை எப்படி இருந்தது. இந்த முறை சந்தித்த போது அவரது அணுகுமுறை எப்படி இருந்தது? கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாரா?’ எனக் கேட்டார். அதற்கு முதலமைச்சர், ‘அவர் பிரதமராக சந்தித்தார். நான் முதல்வராக சந்தித்தேன், அவ்வளவுதான். அனைத்து கோரிக்கைகளையும் பொறுமையாக கேட்டறிந்தார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 15 நிமிடம் தான் நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், சுமார் 45 நிமிடங்கள் வரை பேசியிருக்கிறோம். இதிலிருந்து சந்திப்பு எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறியலாம்’ எனப் பதிலளித்தார். மேலும், ‘தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து..’ அதற்கு முதலமைச்சர், ‘அது தொடர்பாக பிரதமரிடம் விளக்கமாக கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். துறையினுடைய அமைச்சர் ஜெய்சங்கரிடத்திலும் பேசியிருக்கிறோம்’ எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, ‘புதிய கல்வி கொள்கை பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்களா. கையெழுத்து போடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா. பிரதமர் அதற்கு என்ன பதில் சொல்லியிருக்கிறார்’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலமைச்சர், ‘பிரதமர் கலந்துப் பேசி சொல்வதாக கூறியுள்ளார். மேலும், ‘முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?’எனக் கேட்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர், ‘நான் தான் நேற்றே சொல்லியிருக்கின்றேனே. துணிச்சலோடு இருந்திருக்கிறார். அவரின் துணிவை நாங்கள் பாராட்டுகிறோம். நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டத்தில் நீதிமன்றத்தில் போராடி அவர் விடுதலை பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கின்றது. அவருக்கும் இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘பிரதமருடனான இன்றைய சந்திப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால், மத்திய அரசின் செயல்பாடுகள் அப்படி இருக்கிறதா?’ எனத் கேள்வி எழுப்பினார். அதற்கு முதலமைச்சர், ‘நாங்கள் எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல், எங்களது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம், அதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்” எனப் பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து, ‘சோனியா காந்தியை சந்தித்தது தொடர்பாக....’ அதற்கு முதலமைச்சர், ‘மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்’ எனத் தெரிவித்தார். இறுதியாக காவிரி விவகாரம் குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக சொல்லியிருக்கிறார்களே...’ என்ற கேள்விக்கு முதலமைச்சர், ஏற்கனவே இது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.