Skip to main content

சலூன் கடையில் காவலர் அடாவடி; அதிரடி நடவடிக்கையில் எஸ்.பி

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

nn

 

தன் மகனுக்கு சரியாக முடி வெட்டாததால் அடாவடியாக அத்துமீறி மற்றொருவரின் சலூன் கடைக்கு பூட்டு போட்டு பொது இடத்தில் அதகளம் செய்த போலீஸ்காரர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார் மாவட்ட எஸ்.பி. சரவணன்.

 

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் நேவிஸ் பிரிட்டோ. இவரின் மகன் நகரிலுள்ள சலூன் கடைக்கு முடி வெட்டச் சென்றுள்ளார். வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்ததும், அவருக்கு சரியாக முடித்திருத்தம் செய்யவில்லை எனக் கூறி, காவலர் நேவிஸ் பிரிட்டோவும் அவரது மனைவியும் மகனிடம் சலூன் கடை பற்றி சரிவர விசாரிக்காமல் மாறுதலாக தனியார் பள்ளியின் எதிரே உள்ள மற்றொரு சலூன் கடைக்குச் சென்றுள்ளனர். அந்தக் கடையின் உரிமையாளர் இல்லாததால் அவரின் நம்பரில் தொடர்பு கொண்ட காவலர்  அவரை திட்டியதுடன் கடைக்கு வரவழைத்துள்ளார்.

 

அத்துடன் தன்னிடமிருந்த பெரிய பூட்டைக் கொண்டு கடையைப் பூட்ட முயன்றுள்ளார். அதைக்கண்டு பதறிய பக்கத்து கடைக்காரர், “அவர் சாப்பிடச் சென்றுள்ளார். இப்போ வந்துடுவார். கடையைப் பூட்டாதீங்க” என்றவரிடம் அநாகரீகமாக பேசிய காவலர் கடையைப் பூட்டியுள்ளார். சில நொடிகளில் கடையின் உரிமையாளரான யுவசிவராமன் வந்தவுடன் போலீஸ்காரர் நேவிஸ் பிரிட்டோ அங்கிருந்து சென்றிருக்கிறார். அது சமயம் யுவசிவராமன் போலீஸ்காரர் மகனிடம், “நான் உனக்கு முடி வெட்டினேனா” என்று கேட்டதற்கு, “இல்லை” என்று பதிலளித்துள்ளான். அதன் பிறகே போலீஸ்காரர் தவறான கடைக்கு வந்து பூட்டிச் சென்றது தெரியவந்தது.

 

நடு பஜாரில் கடை ஒன்றை காவலர் அடாவடியாகப் பூட்டிய சம்பவம் நகர வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்படுத்த, காவலர் நடந்த கொண்டது, அவரின் அத்துமீறல் பேச்சுக்கள் தொடர்பான வீடியோ வைரலாக, இதனையறிந்த மாவட்ட எஸ்.பி.யான சரவணன் அதிரடி நடவடிக்கையாக போலீஸ்காரர் நேவிஸ் பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

 


 

சார்ந்த செய்திகள்