திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் ராமர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம். இவர் அதே பகுதியில் தனது வீட்டிற்கு முன்பாக மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டது. இதனால் இவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அதே சமயம் அவரது மனைவி கடையில் வியாபாரத்தைக் கவனித்து வந்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் ஜியோ சிம் கார்டு விற்பனையாளர் என கூறியுள்ளார். அந்த இளைஞர் மீது சந்தேகமடைந்த பிரேம் அவரிடம் சிம் கார்டு அல்லது ஐடி கார்டு கேட்டுள்ளார். அதைக் காண்பிக்காததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் அவரைப் பிடித்து விசாரிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த இளைஞர் வைத்திருந்த, ‘விஜய் ரசிகர்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே அந்தப் பகுதியில் பல்வேறு வீடு, கடைகளில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இத்தகைய சூழலில் இது போன்ற மர்ம நபர்களால் சொந்த கிராமத்திலேயே அச்சத்தில் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித் திரியும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.