Skip to main content

தங்கநகை சட்டம்; ஆதரிப்போரும்.. எதிர்ப்போரும்.. 

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

Gold Law; Supporters .. Opponents ..

 

இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தங்க நகைச் சட்டத்தின்படி அனைத்து நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை கண்டிப்பாக இருக்கவேண்டும் என்றும், அதுமட்டுமல்லாமல் ஹால்மார்க் அடையாள எண் படிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்துக்கு தங்க நகை விற்பனையாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அதற்காக நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

 

எதிர்ப்பதற்கான காரணம் குறித்து கேட்டபோது, ‘அனைத்து நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டும் என்ற நடவடிக்கையை வரவேற்கிறோம். எனினும், ஹால்மார்க் அடையாள எண் பதிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. ஒவ்வொரு நகைக்கும் ஹால்மார்க் அடையாள எண் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டுவிழா என பல நிகழ்வுகளுக்கு மக்கள் நகை வாங்கும் பொழுது அந்த எண்களை கொடுப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. அதோடு ஒவ்வொரு நகையிலும் அடையாள எண் போடவும் முடியாது. தாலி, மூக்குத்தி போன்றவற்றில் அடையாள எண்ணை பொரிக்கும்போது நகை சேதமடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனாலயே இச்சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்’ என தெரிவிக்கின்றனர்.

 

இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களோ, ‘இந்தியாவில் 90 சதவித தங்க விற்பனை பில் இல்லாமல் நடக்கிறது. இதனால் நாட்டுக்கு பலலட்சம் கோடி வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதோடு தங்கம் கடத்திவரப்பட்டு இந்தியாவில் நகைகளாக செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் விற்பனையாகும் தங்கநகைக்கும், கொள்முதலுக்கும் இடையே பல்லாயிரம் டன் வித்தியாசம் உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. இதனை முறைப்படுத்தவே இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது’ என்கிறார்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்